» சினிமா » செய்திகள்

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதன் 30, ஜனவரி 2019 3:59:21 PM (IST)

இளையராஜா - 75 இசை நிகழ்ச்சிக்குத் தடை கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா தயாரிப்பாளரான ஜே.எஸ்.சதீஸ்குமார் தாக்கல் செய்த மனுவில், "சென்னையில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். 

மேலும் முன்னாள் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சங்கத்துக்கு ஏற்கெனவே ரூ.7.73 கோடிக்கு முறையான கணக்குகளைக் காட்டவில்லை. இந்த நிலையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டால் அந்த விழாவிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் மற்றும் பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கூட்ட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நடிகர் விஷால் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், வெளிப்படையாக கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படுவதில்லை. மேலும் "இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்காக பலரிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "இந்த விவகாரத்தில் தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், நிகழ்ச்சியை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தால் என்ன என கேள்வி  எழுப்பினார். அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. எனவே நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடியாது என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ள தொகை, நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களை புதன்கிழமைக்குள் (ஜன.30) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள "இளையராஜா 75 பாராட்டு விழாவுக்கான செலவுத் தொகை, விழா தொடர்பான ஒப்பந்தம் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் கோரிய பாராட்டு விழாவுக்கான செலவுத் தொகை, விழா தொடர்பான ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இளையராஜா - 75 இசை நிகழ்ச்சிக்குத் தடை கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும்  இளையராஜா -75 விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைக்கிறார். இளையராஜா -75 என்ற விழா மலரை  வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவை கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படத் துறையில்  உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கலைஞர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் பலரும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள். மேலும், பிப்ரவரி 2-ஆம் தேதி முன்னணி கதாநாயகிகளின் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையும், அரங்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி  இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory