» சினிமா » செய்திகள்

இளையராஜா ராயல்டி கேட்பது தவறு: எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து

திங்கள் 24, டிசம்பர் 2018 4:04:07 PM (IST)

இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல என்று திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாடல்கள் மூலம் கிடைக்கும் ராயல்டி, தயாரிப்பாளர்களுக்குத் தராமல் ஏமாற்றப்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பி.டி.செல்வகுமார் தலைமையில் அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீரா கதிரவன், மணிகண்டன், சந்திரசேகர் ஆகிய தயாரிப்பாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். 

கச்சேரி, காலர் ட்யூன், பாடல் ஒலிபரப்புகள் மூலம்  வரும் வருவாயில், தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கு வரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இளையராஜா மீது தயாரிப்பாளர்களே வழக்குத் தொடுத்திருப்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கன்னியாகுமரியில் கிறிஸ்தவ மத நல்லிணக்க விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பத்திரிகையாளர்கள் இளையராஜா ராயல்டி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு இயக்குநர்.எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பதாவது: பொறியாளர், மேஸ்திரி, கொத்தனார் எனப் பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்கி முடித்து உரிமையாளருக்குக் கொடுத்துவிடுவார்கள். அதற்குப் பிறகு வீடு உரிமையாளருக்குத் தான் சொந்தம். இது அனைத்து தொழிலுக்குமே பொருந்தும். ஆகையால், இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல. படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான தொழில். வீடு, நிலம் எல்லாவற்றையும் விற்றுப் படம் தயாரிக்கிறார்கள். அதில், அதிகமான படங்கள் தோல்வி அடைகின்றன. இத்தனை இன்னல்களைச் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தான் பாடலின் உரிமை சென்றடைய வேண்டும்.

இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள், என அனைவருமே சம்பளம் வாங்கிக் கொண்டு தான் படத்தில் பணிபுரிகிறார்கள். இவர்கள் யாருமே எங்களுக்கு ராயல்டி வேண்டும் என கேட்பதில்லை. அதே போல இசையமைப்பாளரும் ராயல்டி கேட்பது தவறு.இசையமைப்பாளருக்கு என்ன சம்பளமோ அதை தயாரிப்பாளரிடமிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். எனவே, பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை மிகவும் அவசியமாகும். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

samyDec 24, 2018 - 05:03:01 PM | Posted IP 162.1*****

இளையராஜாவின் பக்கம் நியாயம் இருப்பதாக தெரியவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory