» சினிமா » செய்திகள்

பழம்பெரும் இயக்குநர் சி.வி. ராஜேந்திரன் காலமானார்: கவிஞர் வைரமுத்து இரங்கல்

திங்கள் 2, ஏப்ரல் 2018 5:26:17 PM (IST)

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி. ராஜேந்திரன் (81) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு ஜானகி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

சி.வி. ராஜேந்திரனின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர்.

அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா – சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும். அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு குளிர்ந்த சந்திப்பில் ‘வாரம் ஒருமுறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றேன் நான். 

‘நித்தம் ஒரு முறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றார் அவர். கலையும் பண்பாடும் கலந்து நின்ற இயக்குநர் அவர். ஒரு குறிப்பிட்ட கால வெளியைச் சிறகடிக்கும் உற்சாகத்தோடு வைத்திருந்ததில் சி.வி.ஆருக்குப் பெரும் பங்குண்டு. கலையுலகத்தில் ஒரு மூத்த தலைமுறை கழிந்துகொண்டேயிருப்பது கவலை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் கலையுலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory