» சினிமா » செய்திகள்

மெகா பட்ஜெட்டில் திரைப்படமாகிறது மகாபாரதம்: பீமனாக மோகன்லால் ஒப்பந்தம்..!!

புதன் 19, ஏப்ரல் 2017 3:57:13 PM (IST)

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள மகாபாரதம் திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.

சரித்திர, புராண கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வரலாற்று பின்னணியில் தயாரான பாகுபலி வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதன் இரண்டாம் பாகம் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படமும் அதிக பொருட்செலவில் தயாராக உள்ளது.

தற்போது மக்களின் வாழ்வியல் தத்துவமாக கருதப்படும் இந்தியாவின் உயரிய இதிகாசமான மகாபாரதமும் சினிமா படமாக தயாராகிறது. ஏற்கனவே மகாபாரத கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்தியாவின் பல மொழிகளில் படங்கள் வெளிவந்துள்ளன. கர்ணன் பெயரில் சிவாஜிகணேசன் நடித்த படமும் வெளிவந்து இருக்கிறது. டெலிவி‌ஷன்களிலும் மகாபாரதம் கதை தொடர்களாக வந்து மக்களை கவர்ந்தது.

தற்போது மகாபாரதத்தின் முழு கதையும் முதல் தடவையாக ரூ.1,000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்தியாவின் மற்ற மொழிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 100 மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட உள்ளது. பிரபல மலையாள இயக்குனரான வி.ஏ.குமார் மேனன் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். பத்ம பூ‌ஷண் விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதுகிறார்.

அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2020–ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது. முதல் பாகம் வெளியாகி 90 நாட்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் திரைக்கு வரும். வெளிநாட்டு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கண்ணன், அர்ஜுனன், திரவுபதி, கர்ணன், துரியோதனன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம் இந்தி, தெலுங்கு பட உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்–நடிகைகள் நடிக்க உள்ளனர்.

பீமன் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் தேர்வாகி உள்ளார். இதுகுறித்து மோகன்லால் கூறும்போது, ‘‘மகாபாரதம் படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார். டைரக்டர் வி.ஏ.குமார் கூறும்போது, ‘‘மகாபாரதம் கதையை படமாக்குவது குறித்து பல வருடங்கள் ஆராய்ச்சி செய்துள்ளோம். இந்த படத்தில் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். நவீன தொழில் நுட்பத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் அடுத்த தலைமுறைக்கு பிடித்த படமாக இது உருவாகிறது’’ என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory