» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்பராஸ், ரிஷாப் அசத்தம்: நியூசி.க்கு 107 ரன்கள் இலக்கு!
சனி 19, அக்டோபர் 2024 5:14:03 PM (IST)
பெங்களூரு டெஸ்டில் சர்பராஸ் சதம் விளாசினார். ரிஷாப் 99 ரன் குவித்தார். இந்திய அணி 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 46/10, நியூசிலாந்து 402/10 ரன் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, மூன்றாவது நாள் முடிவில் 231/3 ரன் எடுத்து 125 ரன் பின்தங்கி இருந்தது. சர்பராஸ் (70) அவுட்டாகாமல் இருந்தார்.
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த சர்பராஸ், சதம் அடித்தார். இவருக்கு துணையாக நின்ற ரிஷாப், அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 177 ரன் சேர்த்த போது, சர்பராஸ் (150), சவுத்தீ பந்தில் அவுட்டானார். ரிஷாப் 99 ரன்னில் அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்ற இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து இரண்டாவது இன்னிங்சில் 107 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது நியூசிலாந்து. பும்ரா முதல் ஓவரை வீசினார். 4 பந்து மட்டும் வீசப்பட்ட நிலையில், நியூசிலாந்து ரன் எதுவும் எடுக்கவில்லை. பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ரிஷப் பந்த் சாதனை: அஜாஜ் படேலின் ஒரு ஓவரில் ரிஷப் பந்த் 2 சிக்சர்களை விளாசி 61 சிக்சர்களுடன் கபில் தேவ்வின் சிக்சர்கள் சாதனையைக் கடந்தார். இப்போது பென் ஸ்டோக்ஸ் 131 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க அடுத்த இடத்தில் 107 சிக்சர்களுடன் பிரெண்டன் மெக்கல்லமும் 100 சிக்சர்களுடன் 3ம் இடத்தில் ஆடம் கில்கிறிஸ்டும், 98 டெஸ்ட் சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் 4ம் இடத்திலும், காலிஸ் 97 சிக்சர்களுடன் டாப் 5-ல் உள்ளனர். 91 சிக்சர்களுடன் சேவாக் இந்திய வீரர்களில் அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்க, ரோஹித் சர்மா 88 சிக்சர்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.