» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அட்டகாச விரட்டல்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

திங்கள் 30, ஜனவரி 2023 10:58:51 AM (IST)



ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 343 ரன்கள் சாதனை இலக்கை விரட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா 102 பந்துகளில் 109 ரன்களையும், அய்டன் மார்க்ரம் 49 ரன்களையும் பின்னால் இறங்கிய மில்லர் 37 பந்துகளில் 58 ரன்களையும் விளாச தென் ஆப்பிரிக்கா அணி இலக்கை விரட்டத் தொடங்கியது முதலே வெற்றி பெறுவோம் என்ற உத்வேகத்துடன் விரட்டியது. இந்த புளூம்ஃபாண்டெய்ன் மைதானத்தில் அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெறுவது இதுதான் முதல் முறை, இதற்கு முன்னர் 274 ரன்களைத்தான் இங்கு விரட்டியுள்ளனர். 

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் 3வது அதிக ரன் இலக்கை விரட்டலுமாகும் இது. இதன் மூலம் 10 உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகளாக 10 புள்ளிகளைப் பெற்ற தென் ஆப்பிரிக்கா 9வது இடத்தில் உள்ளது, தானாகவே தகுதி பெறுவதற்கு சற்று வெளியே உள்ளது, தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் 4 ஒருநாள் போட்டிகளே உள்ளன. நெதர்லாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வென்றுவிட்டால் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று விடும்.

இந்த நிலையில்தான் பவுமாவின் சதம் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. இது இவரது 3வது சதம். 33 சர்வதேச இன்னிங்ஸ்களுக்குப் பிறகு பவுமா சதமெடுத்துள்ளார். இங்கிலாந்து நேற்று 28/2 என்ற நிலையிலிருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் (94), ஹாரி புரூக் (80) மொயீன் அலி (51) ஆகியோரதுஅதிரடி மூலம் 50 ஓவர்களில் 342/7 என்ற அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்து அணி இதற்கு முன்னர் 5 ஒருநாள் போட்டிகளில் வரிசையாக உதை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பிட்ச் வேகப்பந்துக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருந்தது. அதில் பார்னெல் (1/54), லுங்கி இங்கிடி (1/66) தொடக்கத்தில் அட்டகாசமாக வீசி இங்கிலாந்தை 28/2 என்று குறைத்தனர். முதல் போட்டியில் அதிரடி சதம் விளாசிய ஜேசன் ராய் இந்த முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் இங்கிடி இன்ஸ்விங்கரில் கிளீன் பவுல்டு ஆனார். டேவிட் மலான், பார்னெல் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார்.

பென் டக்கெட், ஹாரி புரூக் பயங்கரமான பந்து வீச்சைச் சந்தித்தனர், திணறினர். ஆனால் இதில் பென் டக்கெட் தாக்குப் பிடிக்கவில்லை கேசவ் மகராஜ் பந்தை தூக்கி அடித்து லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். இங்கிலாந்து 82/3 என்று தடுமாறியது. ஆனால் ஹாரி புரூக் சில அட்டகாசமான கிளாஸ் ஷாட்களை ஆடி 46 பந்துகளில் அரைசதம் விளாசினார். 75 பந்துகளில் 80 ரன்களை விளாசி, இவரும் பட்லரும் ஸ்கோரை 300க்கும் மேல் கொண்டு செல்வார்கள் என்று ஆட்டம் மாறிப்போனது. ஆனால் பவுமா அப்போது ஒரு ஸ்மார்ட் கேப்டன்சி செய்தார் பார்ட் டைம் ஸ்பின்னர் அய்டன் மார்க்ரமை வீச அழைக்க புரூக் கேட்ச் ஆகி வெளியேறினார்.

புரூக் ஆட்டமிழந்தவுடன் அதனால் என்ன அதான் நான் இருக்கேனே என்று பட்லர் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரிகளை விளாசி 49 பந்துகளில் அரைசதம் கண்டார். மொயீன் அலியும் அட்டகாசமாக அடித்து ஆடினார், அதுவும் ஆன்ரிச் நார்க்கியாவை ஒரு ஓவரில் சாத்து சாத்தென்று சாத்தி அரைசதம் பூர்த்தி செய்தார். 36 ஓவர்களில் இங்கிலாந்து 200 ரன்களை எட்டியது. ஆனால் 45 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நார்க்கியா பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார் மொயின் அலி.

கிறிஸ் வோக்ஸ் இறங்கி பேட்டிங் மறந்தது போல் ஆடி 16 பந்துகளில் 14 ரன்களை எடுத்து பட்லரை வெறுப்பேற்றினார். ஆனால் சாம் கரண் இறங்கி சிக்சர்களை விளாச 17 பந்துகளில் 28 ரன்கள் நொறுக்கினார், அதில் நேராக அடித்த ஒரு சிக்ஸ் பின் காலில் சென்று அடித்த அற்புதமான சிக்ஸ். இருவரும் சேர்ந்து கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களை விளாசித்தள்ளினர். பட்லர் 94 ரன்களில் வெளியேறினார் அடித்திருந்தால் இது இவரது 11வது சதமாகியிருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory