» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியை 10விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து : இறுதிப் போடடிக்கு முன்னேறியது!

வியாழன் 10, நவம்பர் 2022 4:40:44 PM (IST)



டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்த் விளையாடினார். இங்கிலாந்து அணியில் மலான், மார்க் வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. பில் சால்ட், ஜோர்டன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ரோஹித் சர்மாவும் கோலியும் சற்று நிதானமாக விளையாடினார்கள். 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது. கோலி 26, சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். சூர்யகுமார் வழக்கம்போல வந்தவுடன் சுறுசுறுப்பாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 14 ரன்களில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். 

அடில் ரஷித் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணியைக் கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களை வீசி 20 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பாண்டியா கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார். மேலும் விக்கெட் விழக்கூடாது என்பதால் இருவரும் கவனமாக விளையாடினார்கள். 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த கோலி, ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். கோலி - பாண்டியா கூட்டணி 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தது. 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வந்த பாண்டியா, 18-வது ஓவர் முதல் அதிரடியாக விளையாடினார். 

18-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார் பாண்டியா. சாம் கரண் வீசிய 19-வது ஓவரில் இந்திய அணிக்கு ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் கிடைத்தன. 29 பந்துகளில் அரை சதமெடுத்தார் பாண்டியா. ரிஷப் பந்த் கடைசி ஓவரில் அணிக்காகத் தனது விக்கெட்டைத் தியாகம் செய்தார். 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். 33 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த பாண்டியா கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory