» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் : கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக் - கோவை அணிகள்!

திங்கள் 1, ஆகஸ்ட் 2022 11:53:03 AM (IST)



தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பகிர்ந்து கொண்டன. 

கடந்த ஜூன் 23-ம் தேதி டிஎன்பிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கியது. மதுரை, சேப்பாக், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நெல்லை, திருச்சி மற்றும் சேலம் என எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த 24-ம் தேதியோடு நடந்து முடிந்தது. நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றன.

தொடர்ந்து 26-ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அதன் பிறகு 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தகுதிச் சுற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. கோவையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. அதனால் 17 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸாக ஆட்டம் மாற்றப்பட்டது.

முதலில் பேட் செய்த லைக்கா அணி 17 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜு 17 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷாருக்கான் 22 ரன்கள் எடுத்தார். மூவரும் தலா ஒரு சிக்ஸர் விளாசி இருந்தனர். 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேப்பாக் அணி விரட்டியது. நான்கு ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அப்போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. 

தொடர்ந்து மழை பொழிவு இருந்த காரணத்தால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஏனெனில் ஆட்டத்தில் முடிவு எட்டப்பட வேண்டுமெனில் குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 5 ஓவர்கள் பேட் செய்திருக்க வேண்டும். இந்த போட்டியில் சேப்பாக் அணி 4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்திருந்தது. மழை காரணமாக மேற்கொண்டு ஒரு ஓவர் வீசப்படவில்லை. அதனால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது சீசனாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி மொத்தம் நான்கு முறை டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோவை அணி வென்றுள்ள முதல் டிஎன்பிஎல் கோப்பை இதுதான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory