» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிஷப் பந்த் அபார சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா!

சனி 2, ஜூலை 2022 10:45:48 AM (IST)



பந்த் - ஜடேஜா இணையின் அபார ஆட்டத்தினால் இங்கிலாந்து டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஜாரா மற்றும் சுப்மன் கில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 17 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார்.

பின்னர் வந்த விஹாரியுடன் மிகவும் எச்சரிக்கையாக விளையாடினார் புஜாரா. இருந்தும் ஆண்டர்சன் வீசிய 18-வது ஓவரின் கடைசி பந்தில் புஜாரா அவுட்டானார். 46 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர். மிகவும் எதிர்பார்ப்போடு அடுத்ததாக களம்புகுந்த விராட் கோலி 19 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இன்சைட் எட்ஜ் முறையில் தனது விக்கெட்டை இங்கிலாந்து பவுலர் பாட்ஸ் வசம் பறிகொடுத்தார். 

முன்னதாக, ஒன் டவுன் பேட்ஸ்மானாக வந்த ஹனுமா விஹாரி இங்கிலாந்து பவுலர்களை சோதித்தாலும், 53 பந்துகளை சந்தித்த அவர், உணவு இடைவேளை முடிந்துவந்ததும் 20 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதிரடியாக மூன்று பவுண்டரிகளுடன் இன்னிங்ஸை தொடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களுக்குள் பெவிலியன் திரும்பினார். கிட்டத்தட்ட 28 ஓவர்கள் முடிவில் வெறும் 98 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவந்த இந்திய அணியை மீட்டவர்கள் ரிஷப் பந்தும், ரவீந்திர ஜடேஜாவும்.

 ஜடேஜா நிதானமாக கிடைக்கிற கேப்பில் பவுண்டரிகளை தட்டி விளையாட, பந்த் இங்கிலாந்து பவுலர்களை பந்தாடினார். இதனால், ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. பந்த் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவரில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற ரீதியிலும், ஸ்பின்னர் லீச் ஓவரில் குறிவைத்து இரண்டு மூன்று பவுண்டரிகளை அடித்தார். இதனால், 51 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், 89 பந்துகளில் சதம் கடந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் ஐந்தாவது சதம் இது. அதேநேரம் இது இங்கிலாந்துக்கு எதிராக அவரின் இரண்டாவது சதமும்கூட. மறுபக்கம் ஜடேஜாவும் பவுண்டரியுடன் அரைசதம் கடந்து இந்திய ரசிகர்களுக்கு மகிழ்வித்தார். சதம் கடந்ததும் பந்த், பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். லீச்சின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை பறக்க வைக்க 63.1 ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.

150 ரன்களுக்கு மேல் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்ட் டைம் பவுலர் ஜோ ரூட் ஓவரில் தூக்கி அடிக்க எட்ஜ் முறையில் 146 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் ஷர்துல் தாகூர் வந்த வேகத்தில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பவுலிங்கில் வெளியேற, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா 83 ரன்களுடனும், ஷமி ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பாட்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory