» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஷாருக் கான் அதிரடி: கர்நாடகத்தை வீழ்த்தி சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது தமிழக அணி!

திங்கள் 22, நவம்பர் 2021 4:32:16 PM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் இறுதி போட்டியில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

டெல்லியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தமிழகச் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் கர்நாடக அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் மட்டும் எடுத்தது.  கடைசி 3 ஓவர்களில் கர்நாடக அணி 42 ரன்கள் குவித்ததால் கடைசியில் கெளரவமான ஸ்கோர் கிடைத்தது. 

கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய பந்துகளில் கர்நாடக பேட்டர்களால் ஒரு பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடியவில்லை. 

பின்னர் தமிழக அணியின் இன்னிங்ஸில் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அதிரடித் தொடக்கத்தை அளித்தார் ஹரி நிஷாந்த். நடுவரிசை வீரர்கள் அதிக ரன்கள் எடுக்காததால் நடு ஓவர்களில் தடுமாறியது தமிழக அணி. தொடக்க வீரர் ஜெகதீசன் 41 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. 

தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் ஷாருக் கானும் சஞ்சய் யாதவும் 19 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் 18-வது ஓவரை வீசிய பிரதீக் ஜெயின் சஞ்சய் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. கடைசிப் பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் அடித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. 

முதல் பந்தில் சாய் கிஷோர் ஒரு பவுண்டரி அடித்தார். ஜெயின் இரு வைட் பந்துகளை வீசினார். இதனால் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான். தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory