» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மேக்ஸ்வெல், சஹல் அபாரம் : ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெங்களூரு அணி

திங்கள் 4, அக்டோபர் 2021 10:33:53 AM (IST)



பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

14-வது ஐபிஎல் சீசனின் ஷார்ஜாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, கேப்டன் விராத் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கோலி 24 பந்துகளில் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ்டியன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் நிலைத்து ஆடிய படிக்கல் 40 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டுமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் ஷமி, ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் துவக்க ஆட்டக்காரர்களான அகர்வால் 57, ராகுல் 39 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் அளித்தனர். ஆனால் இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. மார்கிராம் 20, ஷாருக்கான் 16, ஹென்ரிக்ஸ் 12 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 

இதுவரை ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் 3-வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. இன்னும் இரு போட்டிகள் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் எந்த இடம் என்பது வரும் போட்டிகளில் ஆர்சிபி்க்கு முடிவாகும். அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 5 வெற்றி,8 தோல்விகளுடன்10 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்துவரும் ஒரு போட்டியில் வென்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது. இதனால் கணித ரீதியாக போட்டித் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது.

ஆர்சிபியின் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் மேக்ஸ்வெல்தான். 33பந்துகளி்ல்4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உள்ளிட்ட 57 ரன்கள் சேர்த்த மேக்ஸ்வெலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பந்துவீச்சில் யஜுவந்திர சஹல் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தன. அதிலும் அகர்வால், பூரன் விக்கெட் ஆட்டம் ஆர்சிபி கைகளுக்கு வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறுகையில் "அற்புதமாக உணர்கிறேன். 2011ம் ஆண்டுக்குப்பின், பல போட்டிகளை மீதம் வைத்து ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகவில்லை. தற்போது 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகியுள்ளோம். முதல் இரு இடங்களைப் பிடிக்க இன்னும் இரு போட்டிகள் உள்ளன. இந்த வெற்றி வீரர்களுக்கு நம்பிக்கையையும், அச்சமின்றி விளையாடவும் துணையாக இருக்கும்.

ஸ்கோர்போர்டில் எந்த வீரரும் இல்லாதபோது, அதிகமான ரிஸ்க் எடுக்கலாம்.நானும், படிக்கலும் அப்படித்தான் ஆடினோம். இந்த மைதானத்தில் 15 முதல் 20 ரன்கள் என்பது முக்கியமானது. வெற்றியோ அல்லது தோல்வியோ நாங்கள் எங்களை பட்டைத்தீட்டிக்கொண்டே இருப்போம்.

இந்த ஆடுகளம் மந்தமானது எனத் தெரியும். அகர்வால், ராகுல் சிறப்பாக பேட் செய்தனர், இருவரையும் ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் ஆட்டம்கைக்கு வந்துவிடும் எனத் தெரியும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப்பின்சிராஜ் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். ஹர்ஸல் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. சஹல், ஷான்பாஸ், கார்டன் சிறப்பான பங்களிப்பு செய்தனர். வீரர்கள் சரியாக அமையாவிட்டால், தொடர் கையைவிட்டு சென்றுவிடும்” எனத் தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory