» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது முறையாக சாம்பியன்

திங்கள் 16, ஆகஸ்ட் 2021 11:56:28 AM (IST)



டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. மகுடத்துக்கான இந்த பலப்பரீட்சையில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த திருச்சி கேப்டன் ரஹில் ஷா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தியும், விக்கெட் கீப்பர் ஜெகதீசனும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். அதிரடியாக ஆடிய இவர்கள் முதல் 5 ஓவர்களில் 52 ரன்களை திரட்டி அசத்தினர். சூப்பரான தொடக்கம் தந்த இந்த ஜோடி ஸ்கோர் 58 ரன்களை எட்டிய போது பிரிந்தது. வேகப்பந்து வீச்சாளர் பொய்யாமொழி வீசிய பந்தை கவுசிக் காந்தி(26 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) தட்டிவிட முயன்ற போது அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த ராதாகிருஷ்ணன் 3 ரன்னில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ஆனாலும் மறுமனையில் ஜெகதீசன் வெளுத்து கட்டினார். 26 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த அவர் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியதோடு நடப்பு தொடரில் தனது 3-வது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். 12.3 ஓவர்களில் கில்லீஸ் 100 ரன்களை தொட்டது. அடுத்து வந்த சசிதேவ் (12 ரன்), ஆர்.சதீஷ் (11 ரன்) ஆகியோர் சீக்கிரமாக வெளியேறினர்.

திருச்சி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜெகதீசன், பொய்யாமொழியின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசியதோடு மீண்டும் ஒரு சிக்சருக்கு தூக்கிய போது கேட்ச் ஆகிப்போனார். ஜெகதீசன் 90 ரன்களில் (58 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

கடைசி கட்டத்தில் துரிதம் காட்டிய சோனுயாதவும் (17 ரன், 8 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரன்-அவுட் ஆன ஹரிஷ்குமாரும் (13 ரன்) அணி 180 ரன்களை கடக்க வித்திட்டனர். 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் 184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திருச்சி அணியும் அதிரடிக்கு குறை வைக்கவில்லை. சிக்சர் மழை பொழிந்த அமித் சாத்விக் 36 ரன்களிலும் (16 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்), சந்தோஷ் ஷிவ் 16 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்து மிரட்டியது.

இதன் பின்னர் திருச்சி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. நட்சத்திர வீரர்கள் நிதிஷ் ராஜகோபால் 26 ரன்னிலும், ஆதித்யா கணேஷ் 10 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த திருச்சி அணி, ஆல்-ரவுண்டர் சரவணகுமாரின் சரவெடியால் மீண்டும் நிமிர்ந்தது. 18-வது ஓவரில் 17 ரன்களும், 19-வது ஓவரில் 13 ரன்களும் அவர்கள் எடுக்க, களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இறுதி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. திரிலிங்கான கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் வீசினார். கட்டுக்கோப்புடன் வீசிய அவர் வெறும் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார். திருச்சி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்களே எடுக்க முடிந்தது. சரவணகுமார் 45 ரன்களுடன் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அத்துடன் லீக் மற்றும் முதலாவது தகுதி சுற்றில் திருச்சியிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை உச்சிமுகர்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. வாகை சூடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பிடித்த திருச்சி அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory