» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் டெஸ்ட் சாம்பியன் யார்? ஐ.சி.சி. அறிவிப்பு

சனி 29, மே 2021 9:00:33 AM (IST)



இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ‘டிரா’வில் முடிந்தால் இரு அணிகளும் கூட்டுசாம்பியன்களாக அறிவிக்கப்படும் என்று ஐ.சி.சி. தெளிவுப்படுத்தியுள்ளது.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் அடுத்த மாதம் (ஜூன்) 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ேநற்று வெளியிட்டது. இதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ‘டிரா’ அல்லது ‘டை’யில் (சமன்) முடிந்தால் இரு அணிகளும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பை கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படும். 

ஜூன் 23-ம் தேதி மாற்று நாளாக (ரிசர்வ் டே) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாள் போட்டியின் போதும் மழை, வானிலை மற்றும் இதர காரணங்களால் நேர இழப்பு ஏற்பட்டால் அதை போட்டி நடுவர் கவனத்தில் எடுத்துக் கொள்வார். தேவைப்படும் பட்சத்தில் 5-வது நாளில் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மொத்தம் எவ்வளவு நேரம் வீணாகியுள்ளது என்பது கணக்கிட்டு மாற்று நாளில் அந்த நேரம் ஒதுக்கப்பட்டு அதற்கு ஏற்ப தொடர்ந்து போட்டி நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் (உணவு, தேனீர் இடைவேளை தவிர்த்து) விளையாட வேண்டும். ஏதாவது ஒரு நாளில் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ போட்டி பாதிக்கப்பட்டு, அடுத்த நாட்களில் அந்த நேரம் ஈடுசெய்யப்பட்டால் அது இழப்பு நேரமாக எடுத்துக் கொள்ளப்படாது. அதே சமயம் நேரம் இழப்பு ஏற்படவில்லை என்றால் மாற்று நாள் பயன்படுத்தப்படமாட்டாது. போட்டி 5 நாளும் முழுமையாக நடந்து யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’ ஆனால் இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பெறும். ஆனால் 5-வது நாளுக்குள் போட்டியில் முடிவு கிடைத்து விட்டால் மாற்று நாள், நேரம் இழப்பு கணக்கீடு போன்ற எதுவும் அவசியம் இருக்காது.

இவ்விரு முடிவுகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குவதற்கு முன்பாகவே 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்டு விட்டது என்று ஐ.சி.சி. தற்போது தெரிவித்துள்ளது. பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடும் போது முழுமையாக லைனை தொடாமல் (ஷாட் ரன்) வந்தால் அதை 3-வது நடுவர் வீடியோ மூலம் ஆராய்ந்து முடிவு எடுப்பது, எல்.பி.டபிள்யூ. முடிவு விவகாரத்தில் அப்பீல் செய்யும் முன்பாக பீல்டிங் கேப்டன் அல்லது அவுட் கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன் கள நடுவர்களிடம் அது பற்றி தெளிவுப்படுத்திக்கொள்ள யோசனை கேட்பது போன்ற புதிய விதிமுறைகளும் இந்த போட்டியில் அமல்படுத்தப்படுகின்றன.

இந்திய அணி உள்ளூரில் எஸ்.ஜி. வகை பந்துகளில் டெஸ்ட் போட்டிகளை விளையாடுகிறது. நியூசிலாந்து அணி தங்கள் நாட்டில் கூக்கபுரா பந்துகளில் ஆடுகிறது. ஆனால் இந்த போட்டியில கிரேடு1 டியூக்ஸ் வகை பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாக ஐ.சி.சி. கூறியுள்ளது. அங்குள்ள சீதோஷ்ண நிலை மட்டுமின்றி பந்தும் இரு அணிகளுக்கும் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory