» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19-ல் தொடங்குகிறது : நவ.10-ல் இறுதி போட்டி

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 10:17:29 AM (IST)

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 10-ம் தேதி இறுதி ஆட்டம் நடக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாக ஐசிசி முறைப்படி அறிவித்ததையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டியைத் நடத்தும் தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. 

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை : 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் போட்டி 53 நாட்கள் நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது. துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மத்திய அரசின் அனுமதிக்காக ஐபிஎல் நிர்வாகம் காத்திருக்கிறது. அடுத்த இரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது..

இதற்கு முன் நடந்த போட்டிகள் நடந்த நாட்களைவிட கூடுதலாக 3 நாட்கள் சேர்த்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆட்டங்களில் 10 போட்டிகள் இரு ஆட்டங்கள் நடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் 24 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மாற்று வீரர்கள் வைத்துக்கொள்வதில் கட்டுப்பாடு இல்லை. எத்தனை மாற்றுவீரர்கள் வேண்டுமானாலும் தேவைப்பட்டால் எடுக்கலாம்.

போட்டிகள் அனைத்தும் 30 நிமிடங்கள் முன்கூட்டியே தொடங்குகின்றன. அதன்படி மாலை நடக்கும் போட்டி 4 மணிக்குப் பதிலாக 3.30 மணிக்கே (இந்திய நேரப்படி) தொடங்கும். இரவு நடக்கும் போட்டி 8 மணிக்குப் பதிலாக 7.30 மணிக்குத் (இந்திய நேரப்படி) தொடங்கும். ஐபிஎல் போட்டியில் சீனாவின் விவோ நிறுவனம் ஸ்பான்ஸராகத் தொடர்கிறது.

மகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 3 அணிகள் 4 போட்டிகள் கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும். வீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை டாடா குழுமம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த 7 முதல் 10 நாட்களில் அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகத்தினருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்”.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory