» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வார்னர் - பிஞ்ச் அதிரடி : 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

புதன் 15, ஜனவரி 2020 9:10:15 AM (IST)இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. 

மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ரோகித் 10 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் வார்னர் வசம் பிடிபட, அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து தவானுடன் கே.எல்.ராகுல் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். தவான் ஒருநாள் போட்டிகளில் தனது 28வது அரை சதத்தை பதிவு செய்தார். ராகுல் 47 ரன் (61 பந்து, 4 பவுண்டரி), தவான் 74 ரன் (91 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 28.5 ஓவரில் 140 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் களமிறங்கிய கேப்டன் கோஹ்லி 16 ரன் எடுத்து (14 பந்து, 1 சிக்சர்) ஆடம் ஸம்பா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, இந்தியா 32.5 ஓவரில் 164 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ரிஷப் பன்ட் - ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. ஜடேஜா 25 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ரிஷப் பன்ட் 28 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. கம்மின்ஸ் வீசிய பவுன்சர், பன்ட்டின் மட்டையில் பட்டுத் தெறித்து ஹெல்மெட்டை பலமாகத் தாக்கி உயரே பறந்து கேட்ச்சாக மாறியது குறிப்பிடத்தக்கது. இதனால் பன்ட்டுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்து வந்த தாகூர் 13, ஷமி 10, குல்தீப் 17 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 49.1 ஓவரில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 3, கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் தலா 2, ஸம்பா, ஏகார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. காயம் அடைந்த பன்ட்டுக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச் இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இவர்களைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

சில கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் வாய்ப்புகளை வீணடித்தது மேலும் பின்னடைவாக அமைந்தது. டிஆர்எஸ் முறையீடுகளும் ஆஸி. வீரர்களுக்கு சாதகமாகவே அமைந்தன. இதனால் இந்திய வீரர்கள் விரக்தியில் ஆழ்ந்தனர். அதிரடியைத் தொடர்ந்த வார்னர், ஒருநாள் போட்டிகளில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் பிஞ்ச் தனது 16வது சதத்தை விளாசினார். இருவரும் இந்தியாவுக்கு எதிராக சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆஸ்திரேலியா 37.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 258 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. வார்னர் 128 ரன் (112 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்), பிஞ்ச் 110 ரன்னுடன் (114 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory