» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி!!

செவ்வாய் 3, செப்டம்பர் 2019 12:12:32 PM (IST)வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 111 ரன்னும், கேப்டன் விராட்கோலி 76 ரன்னும், இஷாந்த் ஷர்மா 57 ரன்னும், மயங்க் அகர்வால் 55 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், கார்ன்வால் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து திணறியது. 3-வது நாளில் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மயர் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்டுகளை கபளகரம் செய்தார்.

இதனை அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 57 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மயங்க் அகர்வால் 4 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னிலும், விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும், புஜாரா 27 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஹனுமா விஹாரி ஜோடி நிலைத்து நின்று ஆடி 111 ரன்கள் திரட்டியது.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 64 ரன்னுடனும், ஹனுமா விஹாரி 53 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச் 3 விக்கெட்டும், ஜாசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேம்ப்பெல் 16 ரன்னிலும், பிராத்வெய்ட் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். டேரன் பிராவோ 18 ரன்களுடனும், ஷமார் புரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அதில் களம் இறங்கிய டேரன் பிராவோ, புரூக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்தனர்.  இந்த ஜோடியில் டேரன் பிராவோ 23 ரன்னில் இருக்கையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய புரூக்ஸ் அரை சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய அணியின் சார்பில் முகமது சமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக தனது கன்னி சதத்தை பதிவு செய்த ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற கேப்டனான தோனியின் (27 வெற்றி) முந்தைய சாதனையை, கோலி (28 வெற்றி) முந்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தரவரிசை புள்ளி பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் நியூசிலாந்து (60), இலங்கை (60), ஆஸ்திரேலியா (32), இங்கிலாந்து (32) அணிகள் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer EducationBlack Forest Cakes
Thoothukudi Business Directory