» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பும்ரா, கோலி சாதனை: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றி

திங்கள் 26, ஆகஸ்ட் 2019 11:25:45 AM (IST)ஆன்டிகுவாவில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பந்துவீச முடிவு செய்தது.  இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே 81, ரவீந்திர ஜடேஜா 58 ரன்கள் சேர்த்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 4, கேப்ரியல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 48, கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 39 ரன்கள் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்நிலையில், 75 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, டெஸ்ட் அரங்கில் 10-ஆவது சதத்தை பதிவு செய்தார். 242 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார்.7 ரன்களில் முதல் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த ஹனுமா விஹாரி 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 93 ரன்களும், கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ராஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 419 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியின் திரும்பினர். ஒரு கட்டத்தில் 50 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் தத்தளித்தது. பின்னர் கெமர் ரோச் 38 ரன்கள் சேர்க்க அந்த அணி 100 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இஷாந்த் 3, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பும்ரா சாதனை

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 8 ஓவர்கள் வீசி 4 மெய்டன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் ஆகிய நாடுகளில் அந்நாட்டு அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய அணிகளில் முதல் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா என்ற பெருமையைப் பெற்றார்.

இமாலய வெற்றிஇந்த வெற்றி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற 4-வது மிகப்பெரிய வெற்றியாகும். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இந்திய அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 60 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதில் 60 புள்ளிகளை இந்திய அணி பெற்றுள்ளது.

கங்குலி சாதனை முறியடிப்பு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் போட்டியில் வென்ற அடிப்படையில் கங்குலியின் 11 வெற்றிகளை முறியடித்தார். அதேபோல, கேப்டனாக இருந்த அதிக வெற்றிகளைக் குவித்தவகையில் தோனியின் 27 வெற்றிகளை கோலி சமன் செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory