» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலி, புவனேஸ்வர் குமார் அசத்தல்: வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தியது இந்தியா

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 10:42:41 AM (IST)மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 2-ஆவது ஒருநாள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஷிகர் தவன் 2 ரன்கள், ரோஹித் ஷர்மா 18 ரன்கள், ரிஷப் பண்ட் 20 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார். இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி தனது 42-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 125 பந்துகளில் 120 ரன்களை விளாசினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது 3-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 68 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இந்தியா 50-ஆவது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்திருந்தது. மே.இ.தீவுகள் தரப்பில் பிராத்வெயிட் 3-53 விக்கெட்டை வீழ்த்தினார்.

280 ரன்கள் வெற்றி இலக்குடன் மே.இ.தீவுகள் விளையாடிய போது 12-ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 46 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தொடக்க வீரர் லீவிஸ் மட்டும் அதிகபட்சமாக 65 ரன்களும், பூரான் 42 ரன்களும் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அபாரமாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால் மே.இ.தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory