» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

புதன் 3, ஜூலை 2019 8:58:53 AM (IST)வங்கதேச அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், 28 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 13 புள்ளிகளுடன் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. 

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். குல்தீப், கேதாருக்கு பதிலாக புவனேஷ்வர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டனர். ரோகித், ராகுல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, பின்னர் அதிரடியாக ரன் குவித்தது. ரோகித் 45 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் ராகுல் 57 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டது வங்கதேசத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

அபாரமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 29.1 ஓவரில் 180 ரன் சேர்த்து மிக வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். நடப்பு உலக கோப்பையில் தனது 4வது சதத்தை பதிவு செய்த ரோகித் 104 ரன் (92 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி சர்கார் பந்துவீச்சில் தாஸ் வசம் பிடிபட்டார். ராகுல் 77 ரன் (92 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார். நம்பிக்கையுடன் விளையாடிய கோலி 26 ரன் எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் ருபெல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ரிஷப் பன்ட் - டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. சைபுதின் வீசிய 40வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய பன்ட் 48 ரன் எடுத்து (41 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஷாகிப் சுழலில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் கார்த்திக் 8 ரன், டோனி 35 ரன் (33 பந்து, 4 பவுண்டரி), புவனேஷ்வர் 2, ஷமி 1 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். முஸ்டாபிசுர் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்தது. பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 59 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஷாகிப், ருபெல், சர்கார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 315 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.தமிம் இக்பால், சவும்யா சர்கார் இருவரும் துரத்தலை தொடங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 39 ரன் சேர்த்தது. தமிம் 22 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். 

அடுத்து சர்கார் - ஷாகிப் இணை 2வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தது. சர்கார் 33 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் கோலி வசம் பிடிபட்டார். ஷாகிப் - முஷ்பிகுர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு நம்பிக்கையுடன் விளையாடி 47 ரன் சேர்த்தது. முஷ்பிகுர் 24 ரன் எடுத்து சாஹல் சுழலில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்திய வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். வங்கதேசம் 23 ஓவரில் 121 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஷாகிப் ஹசன் - லிட்டன் தாஸ் இணை 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடியது. ஷாகிப் அரை சதம் அடித்து அசத்தினார். தாஸ் 22 ரன் எடுத்து ஹர்திக் வேகத்தில் கார்த்திக் வசம் பிடிபட, ஆட்டம் இந்திய அணி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஷாகிப் ஹசன் அதிகபட்சமாக 66 ரன் (74 பந்து, 6 பவுண்டரி), முகமத் சைபுதீன் 51 ரன் (38 பந்து 9 பவுண்டரி) விளாச, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். வங்கதேச அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன் எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதுடன் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் பறிகொடுத்தது. இந்தியா 8 போட்டியில் 6 வெற்றி, 1 தோல்வி, 1 ரத்துடன் 13 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அபாரமாக சதமடித்த ரோகித் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

உலக சாதனையை சமன் செய்தார்...

* இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, ஒரே உலக கோப்பை தொடரில் 4 சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2003 உலக கோப்பையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 3 சதம் விளாசி இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை ரோகித் நேற்று முறியடித்தார்.* ஒரே தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனை இலங்கையின் குமார் சங்கக்கரா வசம் உள்ளது. அவர் 2015 தொடரில் தொடர்ச்சியாக 4 சதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார். சங்கக்கராவின் உலக சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.

* நடப்பு தொடரில் ரோகித் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 144 பந்தில் 122* ரன், பாகிஸ்தானுக்கு எதிராக 113 பந்தில் 140 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 109 பந்தில் 102 ரன், வங்கதேசத்துக்கு எதிராக 92 பந்தில் 104 ரன் விளாசி உள்ளார்.

* ஒரு நாள் போட்டிகளில் இது ரோகித் விளாசிய 26வது சதம் ஆகும்.

* வங்கதேசத்துக்கு எதிராக நேற்று சதம் விளாசிய ரோகித், நடப்பு தொடரில் 500 ரன் என்ற மைல் கல்லையும் கடந்தார். உலக கோப்பையின் ஒரு தொடரில் 500+ ரன் எடுக்கும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 1996ல் 523 ரன் மற்றும் 2003 உலக கோப்பையில் 673 ரன் குவித்து அசத்தியுள்ளார்.

கைகொடுத்த அதிர்ஷ்டம் 

நடப்பு உலக கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா சொற்ப ரன் எடுத்திருக்கும்போது கொடுத்த கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை எதிரணியினர் தவறவிட்ட போதெல்லாம், பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி மிகப் பெரிய ஸ்கோர் அடித்திருக்கிறார். தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணியினர் இப்படி லைப் கொடுத்ததை நன்கு பயன்படுத்திக் கொண்ட ரோகித் 122*, 57, 140, 102 ரன் விளாசி இருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் 9 ரன் எடுத்திருந்தபோது முஸ்டாபிசுர் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டீப் ஸ்கொயர் லெக் திசையில் தமிம் நழுவவிட்டார். இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை கொண்டாடும் விதமாக, அதிரடியை தொடர்ந்த ரோகித் சதம் அடித்து அசத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory