» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு முதல் தோல்வி: 31 ரன்னில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது

திங்கள் 1, ஜூலை 2019 10:51:25 AM (IST)உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் தோல்வியை சந்தித்தது. வெற்றி கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணி 31 ரன்னில் இந்திய அணியை வீழ்த்தியது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. பர்மிங்காமில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து உள்ளூர் அணியான இங்கிலாந்து மோதியது. இந்த தொடரில் இந்தியா தான் விளையாடி 6 போட்டியில் 5 வெற்றி. ஒரு ஆட்டம் ரத்து என மொத்தம் 11 புள்ளிகள் எடுத்திருந்தது. தவிர இந்த தொடரில் தோல்வியடையாத அணியாக இந்தியா வலம் வந்தது. மாறாக 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி மீதமுள்ள இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பு தகரந்துவிடும் என்ற நிலை இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 100வது போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே ஆட்டம் துவங்கியது. டாஸ் போடப்பட்ட போது இந்திய கேப்டன் கோலி, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஆகியோருடன் இந்திய ஜாம்பவான் சச்சின் பங்கேற்றார். இவர், யுனிசெப் தூதராக கலந்து கொண்டார். இவர்களுடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக் ஆதர்டன், மேட்ச் ரெப்ரி ரஞ்சன் மதுகாலே ஆகியோரும் பங்கேற்றனர். தவிர, இந்திய வீரர்கள் புதிய ஜெர்சியுடன் களமிறங்கினர். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்திலிருந்து விடுபட்ட நிலையல், ஜேசன் ராய் அணிக்கு திரும்பினார். இதபோல் பிளங்கட் அணிக்கு தேர்வானர். இதையடுத்து வின்ஸ், மொயீன் அலி நீக்கப்பட்டனர். இந்திய அணியில் விஜய் சங்கர் இடத்தில் இளம் வீரர் ரிஷாப் பன்ட் வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பந்து நாலா புறமும் பறக்க ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. முதல் 10 (பவர்பிளே) ஓவரில் 47 ரன் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி பின் விஸ்வரூபம் எடுத்தது. குறிப்பாக, சகால், குல்தீப் இருவரது பந்து வீச்சை அடித்து நொறுக்கினர், பந்து சிக்சர், பவுண்டரி என பறக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

15.3 ஓவரில் இங்கிலாந்து 100 ரன் கடந்தது. பேர்ஸ்டோவ் 56 பந்தில் அரைசதம் கடந்தார். இவரைத் தொடர்ந்து 41 பந்தில் ஜேசன் ராய் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் கோலி திணறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன் (22.1 ஓவர்) சேர்த்த நிலையில், குல்தீப் சுழலில் ஜேசன் ராய் சிக்கினார். இனர் 66 ரன் (57 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து ஜோ ரூட் களம் வந்தார். இவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அதே நேரம் பேர்ஸடோவ் விளாச துவங்கினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ் 90 பந்தில் தனது முதலாவது உலக கோப்பை சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. தவிர, ஒருநாள் போட்டியில் இவரது 8வது சதம் இதுவாகும். 30வது ஓவரில் இங்கிலாந்து 200 ரன்னை எடுத்த போது இப்போட்டியில் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

பேர்ஸ்டோவ் 111 ரன் (109 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்த நிலையில் முகமது ஷமி வேகத்தில் சரிந்தார். தொடர்ந்து அசத்திய ஷமி இம்முறை கேப்டன் மார்கன் (1), ஜோ ரூட் (44), பட்லர் (20) விக்கெட்டை வீழ்த்தினார். அதே நேரம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ், ஒருநாள் போட்டியில் தனது 19வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 38 பந்தில் அரைசதம் அடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பும்ரா வேகத்தில் ஸ்டோக்ஸ் சரிந்தார். இவர் 79 ரன் (54 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். வோக்ஸ் (7) சொதப்பினார். முடிவில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. பிளங்கட் (1), ஜோப்ரா ஆர்ச்சர் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது ஷமி 5 (10-1-69-5) விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, குல்தீப் தலா 1 விக்கெட் சாய்த்தனர். சகால் தனது 10 ஓவரில் 88 ரன் விட்டுக் கொடுத்தார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. வோக்ஸ் வேகத்தில் ராகுல் டக்-அவுட் ஆனார். பின் ரோகித்துடன் கேப்டன் கோலி இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 59 பந்தில் தனது 54வது அரைசதத்தை பதிவு செய்தார். இது இந்த தொடரில் இவர் தொடர்ச்சியாக பதிவு செய்யும் 5வது அரைசதமாகும். 22வது ஓவரின் முடிவில் இந்தியா 100 ரன் எடுத்தது. கோலியை தொடர்ந்து ரோகித் 65 பந்தில் அரைசதம் அடிக்க சரிவிலிருந்து இந்தியா மீளத் துவங்கியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த நிலையில், பிளங்கட் பந்தில் கோலி அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவர் 66 ரன் (76 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார்.

அடுத்து இளம் வீரர் ரிஷாப் பன்ட் களம் வந்தார். இந்த நேரத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 25வது சதத்தை பதிவு செய்தார். இவர் 106 பந்தில் சதம் விளாசினார். தவிர, இந்த தொடரில் இவரது 3வது சதம் இதுவாகும். ரோகித் 102 ரன் (109 பந்து, 15 பவுண்டரி) எடுத்து வோக்ஸ் வேகத்தில் சரிந்தார். பின் ரிஷாப் பன்ட்டுடன் பாண்ட்யா இணைந்தார். 36.2 ஓவரில் இந்தியா 200 ரன் கடந்தது. முக்கிய கட்டத்தில் ரிஷாப் பன்ட் (32) வெளியேறி திர்ச்சி கொடுத்தார். அடுத்து தோவி களம் வர 10 ஓவரில் 105 ரன் தேவைப்பட்டது. அதிரடியாக விளையாடி டந்த பாண்ட்யா (48) ரைசத வாய்ப்பை ழந்து வெளியேற இந்தியாவின் தோல்வி உறதியானது. வழக்கம் போல் தோனி சொதப்ப அவருடன் சேர்ந்து ஜாதவும் பந்தை வீண் செய்ய இந்திய ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறத் துவங்கினர்.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்து தனது முதல் தோல்வியை சந்தித்தது. தோவி (42), கேதர் ஜாதவ் 912) வுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிளங்கட் 3, வோக்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர். சதம் விளாசிய பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்தின் இந்த வெற்றியால் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை (செஸ்டர் லீ ஸ்டிரீட், ஜூலை 3) எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறிவிடும். இந்தியா தனது 8வது லீக் போட்டியில் வங்கதேசத்தை இதே மைதானத்தில் நாளை எதிர்கொள்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Thoothukudi Business Directory