» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸி!!

புதன் 26, ஜூன் 2019 12:41:35 PM (IST)உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு  முன்னேறியது ஆஸ்திரேலிய அணி.

டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் இரவு பெய்த மழை பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கம் என கணித்தார் மோர்கன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பிஞ்ச்,வார்னர் நல்ல தொடக்கம் அளித்தனர். கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர் இங்கிலாந்து பந்துவீச்சை நன்கு சமாளித்து, சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இந்த உலகக் கோப்பை தொடரில் 3-வது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.

ஆரோன் பிஞ்ச் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்த 2-வது கேப்டன் எனும் பெருமையை பிஞ்ச் பெற்றார். வார்னர் அரைசதம் அடித்து, உலகக்கோப்பையில், 500 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். வார்னர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். பிஞ்ச் 100 ரன்களில்(2சிக்ஸர், 11பவுண்டரி) ஆட்டமிழந்தார். இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த எந்த வீரர்களும் பயன்படுத்தவில்லை என்பதுதான் வேதனை.

ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் இருந்தபோது, நிச்சயம் 300 ரன்களுக்கு மேல் செல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால், பிஞ்ச், வார்னர் சென்றபின், அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். நடுவரிசை வீரர்கள் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்திருந்தால், நிச்சயம் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும். கடைசி 6 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு ஆஸி. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

286 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பெஹரன்டார்ப் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் இன்ஸ்விங் பந்தை ஆடத்தெரியாமல் க்ளீன் போல்டாகினார் வின்ஸ். கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் மெக்கலத்தை இதேபோன்றுதான் போல்டாக்கினார் ஸ்டார்க் என்பது நினைவிருக்கும். அதன்பின் வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரூட்(8), மோர்கன்(4), பேர்ஸ்டோ(27) என 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. 

பெஹரன்டார்ப், ஸ்டார்க் பந்துவீச்சுக்கு இங்கிலாந்து வீரர்கள் ஒட்டுமொத்தமாகவே திணறினர். ஸ்டோக்ஸ் மட்டும் களத்தில் போராடி 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வோக்ஸ்(26), மொயின் அலி(6), ரஷித் (25), ஆர்ச்சர்(1)என ஆட்டமிழந்தனர். கடைசி 44 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கத்தில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்த விரைவான சரிவுதான், பாட்னர்ஷிப் இன்றி சென்றதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 44.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 221ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 4 விக்ெகட்டுகளையும், பெஹரன்டார்ப் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் 2அடுத்தடுத்த தோல்வி, 4 வெற்றிகள் என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியை உறுதிசெய்துவிட்டது. ஏனென்றால், டைபிரேக்கர் அடிப்படையில் வந்தாலும் முதலில் அதிகமான வெற்றிகள்தான் கணக்கிடப்படும். அந்த வகையில் ஆஸி. தற்போது 6 வெற்றிகளுடன் இருக்கிறது. ரன்ரேட்டைக் காட்டிலும் அதிக வெற்றிகளே கணக்கிடப்படும் என்பதால், ஆஸி முன்னேறிவிட்டது . இன்னும் 2 ஆட்டங்கள் இருக்கின்றன. உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்தால் வெல்ல முடியாது என்ற  வரலாறு  கடந்த 27 ஆண்டுகளாக நீடிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory