» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆப்கானிஸ்தானை போராடி வென்றது இந்திய அணி: முகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை

ஞாயிறு 23, ஜூன் 2019 10:19:43 AM (IST)உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. முகமது ஷமி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த  28-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். விஜய் சங்கர் காயத்தில் இருந்து தேறிவிட்டதால் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி துணை கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். குட்டி அணியான ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் என்ற பெரும்பாலான நிபுணர்களின் கணிப்பு தூள்தூளானது. ரோகித் சர்மா (1 ரன், 10 பந்து) சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இந்த உலக கோப்பையில் இந்திய விக்கெட்டை கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் தான். அடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார்.

விராட் கோலியும், ராகுலும் அணியை சரிவில் இருந்து சற்று மீட்பது போல் தெரிந்தது. ஸ்கோர் 64 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி பிரித்தார். அவரது பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் (30 ரன்) தேவையில்லாமல் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். தொடர்ந்து விஜய் சங்கர் வந்தார். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்றது. ஓரளவு பவுன்சும் காணப்பட்டது. இந்த சாதகமான சூழலை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்தி அச்சுறுத்தினர். முஜீப் ரகுமான், முகமது நபி, ரஷித்கான், ரமத் ஷா ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது சுழல் தாக்குதலை தொடுத்து மிரட்டினர்.

இந்திய வீரர்களும், சிறிய அணிதானே என்ற நினைப்புடன் மெத்தனமாக ஆடினார்களோ என்னவோ விக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக தாரைவார்த்தனர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் 29 ரன்னில் (41 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார். விராட் கோலியும் (67 ரன், 63 பந்து, 5 பவுண்டரி) முகமது நபியின் சுழலில் சிக்கினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஆமை வேகத்தில் தான் நகர்ந்தது. மூத்த வீரர் டோனியும், கேதர் ஜாதவும் இணைந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர போராடினர். ஆனால் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை சமாளித்து டோனியால் ஒன்று, இரண்டு ரன் வீதம் தொடர்ச்சியாக எடுக்க இயலவில்லை. 33 பந்துகளில் அவர் ரன்னே எடுக்கவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளான அவர் ரஷித்கானின் பந்து வீச்சில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து சிக்சருக்கு முயற்சித்த போது ஏமாந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். டோனி 28 ரன் (52 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார்.

கடைசி கட்டத்தில் கேதர் ஜாதவ் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஆடினார். எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவும் (7 ரன்) மிளிரவில்லை. கேதர் ஜாதவ் 52 ரன்களில் (68 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. மொத்தம் 152 பந்துகளை இந்திய வீரர்கள் ரன்னின்றி விரயமாக்கியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களை முழுமையாக ஆடிய ஆட்டங்களில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் குறைந்த ஸ்கோர் இதுதான். ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்படின் நைப், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து குறைவான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்தனர். அவசரப்படாமல் நிதான போக்கை கடைபிடித்தாலும் இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா 10 ரன்னிலும், கேப்டன் குல்படின் நைப் 27 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். 3-வது விக்கெட்டுக்கு ரமத் ஷாவும், ஹஸ்மத்துல்லா ஷகிடியும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 26.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 100 ரன்களை எட்டியது. இவர்கள் ஆடிய விதம் இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

இந்த சூழலில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பந்து வீச கேப்டன் கோலி அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. ஒரே ஓவரில் ரமத் ஷா (36 ரன்), ஹஸ்மத்துல்லா (21 ரன்) இருவரையும் காலி செய்தார். அதன் பிறகே இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் அடுத்து வந்த வீரர்களும் குடைச்சல் கொடுக்காமல் இல்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் முகமது நபி, இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டினார். பும்ராவின் ஓவரில் அட்டகாசமாக ஒரு சிக்சரையும் பறக்க விட்டார். கடைசி 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரில் முகமது ஷமி 3 ரன்னும், 49-வது ஓவரில் பும்ரா 5 ரன்னும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினர். இதனால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது.

பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். புல்டாசாக வந்த முதல் பந்தை முகமது நபி பவுண்டரி அடித்து இந்திய ரசிகர்களை திகிலடையச் செய்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்காத முகமது நபி (52 ரன், 55 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) 3-வது பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். தொடர்ந்து இறங்கிய அப்தாப் ஆலம், முஜீப் ரகுமான் இருவரும் முகமது ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில் கிளன் போல்டு ஆனார்கள். முகமது ஷமியின் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனையோடு இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.5-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் சந்தித்த 6-வது தோல்வியாகும். பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory