» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: தவன் விலகல் - இந்திய அணியில் ரிஷாப் பந்துக்கு வாய்ப்பு

வியாழன் 20, ஜூன் 2019 5:56:29 PM (IST)

காயம் காரணமாக ஷிகர் தவன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ரிஷாப் பந்த் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 8 ரன் எடுத்த ஷிகர் தவன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 9–ந்தேதி லண்டன் ஓவலில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 117 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் இந்த ஆட்டத்தின் போது கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர் பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியை பொறுத்து கொண்டு தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார்.

‘ஸ்கேன்’ பரிசோதனையில் அவரது இடது கை பெருவிரலில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அணியின் முக்கியமான சீனியர் வீரர் என்பதால் காயத்தை காரணம் காட்டி அவரை உடனடியாக கழற்றி விட அணி நிர்வாகம் விரும்பவில்லை. அவரால் 3 ஆட்டங்களில் விளையாட முடியாது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவனின் காயத்தன்மை குறித்து துல்லியமாக அறிய சில மருத்துவ நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் அவரது காயம் குறிப்பிட்ட காலத்திற்குள் குணமடைய வாய்ப்பில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நேற்று விலகினார்.

இந்திய அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் கூறுகையில், ‘சில டாக்டர்களிடம் ஆலோசித்த போது தவனின் விரலை சுற்றி போடப்பட்டுள்ள கட்டுவை ஜூலை மாதம் 2–வது வாரம் வரை பிரிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் உலககோப்பை கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் அவரால் பங்கேற்க இயலாது’ என்றார். 33 வயதான ஷிகர் தவன் பொதுவாக இங்கிலாந்து மண்ணில் நடக்கும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவரது விலகல் இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான் என்பதில் சந்தேகமில்லை.

தவனுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான 21 வயதான ரிஷாப் பந்த் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஐ.சி.சி.யின் தொழில்நுட்ப கமிட்டியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்புக்குரிய ரிஷாப் பந்த் கடந்த மாதம் நிறைவடைந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 16 ஆட்டங்களில் ஆடி 27 சிக்சர் உள்பட 488 ரன்கள் குவித்தது நினைவு கூரத்தக்கது. ரிஷாப் பந்த் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று விட்ட போதிலும் சவுதம்டனில் நாளை மறுதினம் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory