» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென்ஆப்பிரிக்கா அணிக்கு 4-வது தோல்வி: உலக கோப்பை கனவு முடிந்தது?

வியாழன் 20, ஜூன் 2019 5:45:58 PM (IST)உலக கோப்பை கிரிக்கெட்டில் 4-வது தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பர்மிங்காமில் நேற்று அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் கோதாவில் குதித்தன. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார்.

கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயின்டான் டி காக்குக்கு (5 ரன்) டிரென்ட் பவுல்டின் பந்து வீச்சில் லெக் ஸ்டம்பு பல்டி அடித்தது. இதையடுத்து கேப்டன் பிளிஸ்சிஸ் நுழைந்தார். நியூசிலாந்தின் பந்து வீச்சு அபாரமாக இருந்ததால் தென்ஆப்பிரிக்க வீரர்களின் ரன்வேகம் மந்தமானது. மற்றொரு தொடக்க வீரர் ஹசிம் அம்லா 25 ரன் எடுத்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை (176 இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை விராட் கோலிக்கு அடுத்து வேகமாக எட்டியவர் என்ற சிறப்போடு தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்தார்.

ஸ்கோர் 59 ரன்களாக உயர்ந்த போது பிளிஸ்சிஸ் (23 ரன், 35 பந்து, 4 பவுண்டரி) பெர்குசனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். 25.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. மறுமுனையில் அரைசதம் எட்டிய அம்லா 55 ரன்களில் (83 பந்து, 4 பவுண்டரி) சான்ட்னெரின் சுழலில் சிக்கினார். இதன் பிறகு தங்களது பிடியை மேலும் இறுக்கிய நியூசிலாந்து பவுலர்கள் 33 ஓவர் முதல் 41 ஓவர் வரை பந்தை ஒரு முறை கூட எல்லைக்கோடு பக்கம் விடவில்லை. என்றாலும் இறுதி கட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கொஞ்சம் துடிப்புடன் விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். குறிப்பாக வான்டெர் துஸ்சென் 64 பந்துகளில் 67 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சற்று சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டார். நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 

கடைசி 8 ஓவர்களில் மட்டும் 68 ரன்கள் திரட்டினர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 242 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியும் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. காலின் முன்ரோ 9 ரன்னிலும், மார்ட்டின் கப்தில் 35 ரன்னிலும், ராஸ் டெய்லர், டாம் லாதம் தலா ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 23 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதற்கு மத்தியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று, தென்ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவருக்கு கிரான்ட்ஹோம் ஒத்துழைப்பு கொடுக்க, நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. கிரான்ட்ஹோம் 60 ரன்னில் (5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை பெலக்வாயோ வீசினார். இதில் முதல் பந்தில் சான்ட்னெர் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் அதை சிக்சருக்கு தூக்கியடித்து தனது 12-வது சதத்தை எட்டினார். அதே சமயம் உலக கோப்பையில் அவரது கன்னி சதமாக இது அமைந்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தித்திப்புடன் நிறைவு செய்தார்.

நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. வில்லியம்சன் 106 ரன்களுடனும் (138 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), சான்ட்னெர் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தார். 4-வது வெற்றியை பெற்ற நியூசிலாந்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணியின் உலக கோப்பை கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். 6-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு இது 4-வது தோல்வியாகும். 3 புள்ளியுடன் உள்ள தென்ஆப்பிரிக்க அணி எஞ்சிய 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பிரயோஜனம் இருக்காது.  தென்ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory