» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஸ்மித், வார்னர் மீதான தடை நீடிக்கும்; ஆஸி. கிரிக்கெட் வாரியம் முடிவு

செவ்வாய் 20, நவம்பர் 2018 5:16:25 PM (IST)

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மீதான தடையை நீக்கும் பேச்சுக்கு இடமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினர். இவர்களில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஒரு ஆண்டு தடையும், கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இதில் பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் மாதமும், ஸ்மித், வார்னர் மீதான தடை 2019-ம் ஆண்டு மார்ச் மாதமும் முடிகிறது. 

ஆனால், கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளை கருத்தில் கொண்டு ஸ்மித், வார்னர் இருவரையும் அணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தினரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்குப் பரிந்துரை செய்தனர், மேலும், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சூழ்நிலைதான் காரணம் என்று ஆதாரங்களையும் ஆஸி.வீரர்கள் சங்கத்தின் வாரியத்திடம் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஸ்மித், வார்னர் மீது தடை விதிக்கப்பட்ட பின் சிலமாதங்களில் பயிற்சியாளர் லீ மான் பதவி விலகினார். இருவரின் மீதும் தடை விதிக்க காணமாக இருந்த ஆஸ்திரேலிய வாரியத் தலைவர் டேவிட் பீர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். பல்வேறு தரப்பில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கடி வந்தது. ஸ்மித், வார்னர் மீதான ஒரு ஆண்டு தடை முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தியத் தொடர், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி, ஆஷஸ் கோப்பை என வரிசையாக ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. இவற்றுக்கு ஆஸ்திரேலிய அணியைத் தயார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

மேலும் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் அவர்கள் இருவரும் இடம் பெறவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடையை நீக்குவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் இயர்ல் எடிங்ஸ் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில் 3 பேரும் தண்டனையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ஆஸி.வாரியத்தின் தலைவர் இயர்ல் எடிங்க் கூறுகையில், "3 வீரர்கள் மீதான தடையை நீக்கக் கோரி செய்யப்படும் விவாதங்கள் அனைத்தும் அந்த வீரர்களுக்கு அழுத்தத்தைத்தான் அதிகரிக்கும். அவர்கள் மீதான தண்டனையைக் குறைக்கும் பேச்சுக்கு இடமில்லை, தண்டனையைத் திருத்தவும் முடியாது” எனத் தெரிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், 3 வீரர்களும் தண்டனை முடிந்தபின்பே சர்வதேசப் போட்டியில் விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Joseph Marketing




Thoothukudi Business Directory