» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி.என்.பி.எல். முதல் போட்டியில் திருச்சி திரில்வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது

வியாழன் 12, ஜூலை 2018 10:35:42 AM (IST)டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் அணி திரில்வெற்றி பெற்றது.

3-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த கண்கவர் தொடக்க விழாவில் அஸ்வின் (திண்டுக்கல் டிராகன்ஸ்), பாபா இந்திரஜித் (திருச்சி வாரியர்ஸ்), கோபிநாத் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), அபினவ் முகுந்த் (கோவை கிங்ஸ்), கவுஷிக் காந்தி (தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்), ரோகித் (மதுரை பாந்தர்ஸ்), பாபா அபராஜித் (காஞ்சி வீரன்ஸ்), அனிருத்தா ஸ்ரீகாந்த் (காரைக்குடி காளை) ஆகிய 8 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு விளையாட்டு உத்வேகத்திற்குரிய உறுதிமொழி எடுத்துக் கொண்டு பேட்டில் கையெழுத்திட்டனர். 

சூப்பர் சிக்சர்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. இதைத் தொடர்ந்து நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும், இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களம் இறங்கிய திண்டுக்கல் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் (8 ரன்) ஏமாற்றிய போதிலும் ஹரி நிஷாந்தும், ரோகித்தும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹரி நிஷாந்த் தனது பங்குக்கு 41 ரன்களும் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரோகித் 46 ரன்களும் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். மிடில் வரிசையில் கேப்டன் அஸ்வின் (42 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. திருச்சி தரப்பில் சஞ்சய், லட்சுமி நாராயணன், குமரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 87 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (12.5 ஓவர்) இழந்து பரிதவித்தது. இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு சுரேஷ் குமாரும், சோனு யாதவும் கூட்டணி அமைத்து ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினர். ஆதித்யா அருணின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்களை திரட்டினர். சோனு யாதவ் 30 ரன்களில் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் ஆனார். அடுத்து சஞ்சய் வந்தார்.

கடைசி ஓவரில் திருச்சியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது வீசினார். முதல் பந்தில் சுரேஷ் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை சஞ்சய் சிக்சருக்கு அனுப்பினார். பிறகு 3-வது பந்தில் சஞ்சய் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை சந்தித்த சுரேஷ் குமார் சிக்சருக்கு விரட்டினார். 5-வது பந்து வைடாக வீசப்பட, மீண்டும் வீசப்பட்ட 5-வது பந்தில் சுரேஷ் குமார் சிக்சர் விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

திருச்சி அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. சுரேஷ்குமார் 45 ரன்களுடனும் (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சஞ்சய் 11 ரன்களுடனும் ( ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். திண்டுக்கல் அணி நிறைய கேட்ச்சுகளை தவற விட்டது பின்னடைவாக அமைந்தது. அந்த அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியும் பலன் இல்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Anbu Communications

Thoothukudi Business Directory