» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை அணியை கதறடித்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியா!!

திங்கள் 25, டிசம்பர் 2017 10:38:40 AM (IST)

இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இரு அணியிலும் தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக அறிமுக வீரராக வாஷிங்டன் சுந்தரும், முகமது சிராஜூம் இடம் பிடித்தனர். இலங்கை அணியில் காயமடைந்த மேத்யூஸ் மற்றும் சதுரங்கா டி சில்வா நீக்கப்பட்டு குணதிலகா, ஷனகா சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு இந்த முறையும் திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தரும், ஜெய்தேவ் உனட்கட்டும் பந்து வீச்சில் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். தொடக்க ஆட்டக்காரர் டிக்வெல்லா (1 ரன்) உனட்கட்டின் ஓவரில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த குசல் பெரேரா (4 ரன்), வாஷிங்டனின் பந்து வீச்சில் அவரிமே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா (11 ரன்) சிக்சருக்கு ஆசைப்பட்டு கேட்ச் ஆகிப்போனார்.

18 ரன்னுக்குள் (3.3 ஓவர்) மூன்று முன்னணி தலைகள் உருண்டதால் அதன் பிறகு இலங்கை அணியால் நிமிர முடியவில்லை. முந்தைய ஆட்டத்தை போன்று விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்து விடக்கூடாது என்பதற்காக அதன் பிறகு நிதானத்தை கடைபிடித்தனர். இதனால் ஆட்டத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டிற்குரிய சுவாரஸ்யமே இல்லை. சீரான இடைவெளியில் விக்கெட் சரிய, ஸ்கோரும் மந்தமாகவே நகர்ந்தது. முகமது சிராஜின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 18 ரன்கள் திரட்டி 130 ரன்களை கடக்க வைத்தது மட்டுமே இலங்கை அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும். 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக குணரத்னே 36 ரன்களும் (37 பந்து, 3 பவுண்டரி), ஷனகா 29 ரன்களும் (24 பந்து, 2 சிக்சர்) எடுத்தனர்.

அடுத்து 136 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த இந்திய பேட்ஸ்மேன்களும் கொஞ்சம் தடுமாறினர். ஆடுகளம் இருவித தன்மையுடன் காணப்பட்டதால், கணித்து ஆட வேண்டி இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களிலும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர். மிடில் வரிசை வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் (30 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), மனிஷ் பாண்டே (32 ரன், 29 பந்து, 4 பவுண்டரி) ஓரளவு தாக்குப்பிடித்தாலும் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. இதற்கிடையே ஹர்திக் பாண்டயாவும் (4 ரன்) பெவிலியன் திரும்பியதால் இந்தியாவுக்கு நெருக்கடி உருவானது. ரசிகர்களும் பரபரப்புக்குள்ளானார்கள்.

கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கும், டோனியும் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரை வீசிய நுவான் பிரதீப் முதல் 5 பந்துகளில் 6 ரன் விட்டுக்கொடுத்தார். 6-வது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு பறக்கவிட்டு, பதற்றத்தை தணித்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 3 ரன் தேவையாக இருந்தது. இதில் முதல் பந்தில் 2 ரன் எடுத்த டோனி, 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து தித்திப்புடன் முடித்து வைத்தார். 

இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும், டோனி 16 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 20 ஓவர் போட்டித்தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக கட்டாக், இந்தூர் ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. ஏற்கனவே டெஸ்ட் (1-0) மற்றும் ஒரு நாள் தொடரையும் (2-1) இந்திய அணி கைப்பற்றி விட்டதால், இலங்கை அணி ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது.

வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்

இந்த ஆட்டத்தில் களம் இறங்கிய தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு இதுவே முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியாகும். அவரது வயது 18 ஆண்டு 80 நாட்கள். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக குறைந்த வயதில் அறிமுகம் ஆனவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு ரிஷாப் பான்ட் இந்த சிறப்பை பெற்றிருந்தார். அவர் அடியெடுத்து வைத்த போது அவரது வயது 19 ஆண்டு 120 நாட்கள். 

இந்தியா சாதனை; இலங்கை வேதனை

* சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ச்சியாக தழுவிய 8-வது தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு இலங்கை அணி 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2017-ம் ஆண்டு ஜனவரி வரை தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோற்றிருந்தது. அந்த மோசமான தோல்விப்பயணத்தை இப்போது மிஞ்சியிருக்கிறது.

* இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணி இந்தியா தான். 13 ஆட்டங்களில் 9-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2-வது இடத்தில் பாகிஸ்தான் (8 வெற்றி, 2 தோல்வி) இருக்கிறது. இலங்கை அணி இந்த ஆண்டில் 15 ஆட்டங்களில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 10-ல் மண்ணை கவ்வியது.

* மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்திய அணி இந்த ஆண்டில் 37 வெற்றிகளை பதிவு செய்து இருக்கிறது. ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகளின் வரிசையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்த வகையில் ஆஸ்திரேலியா 38 வெற்றிகளுடன் (2003-ம் ஆண்டு) முதலிடத்தில் உள்ளது. 

அடுத்து தென்ஆப்பிரிக்காவுடன் சவால் ...

இலங்கை அணியை கதறடித்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணிக்கு இனி தான் உண்மையான சோதனை காத்திருக்கிறது. இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று, அங்கு மூன்று டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் 27-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படுகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


crescentopticalsNew Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph MarketingThoothukudi Business Directory