» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி ஒரு சூப்பர் ஸ்டார்: ரவி சாஸ்திரி கருத்து!

வெள்ளி 10, நவம்பர் 2017 4:47:23 PM (IST)தோனி ஒரு சூப்பர் ஸ்டார், ஓர் அருமையான அணி வீரர் என்று ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிறைவடைந்த இந்தியா-நியூஸிலாந்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-ஆவது டி20 ஆட்டத்தில் தோனி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 

இதையடுத்து, டி20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து முன்னாள் கேப்டன் தோனி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்திருந்தார். அணியில் தோனியின் பங்களிப்பை அவருக்கு குழு மேலாண்மை புரிய வைக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் தோனி குறித்த தங்களுடைய கருத்துகளை ஊடகங்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

ஆனால், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தோனிக்கு ஆதரவாக கோலி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிலர் தோனி குறித்து மட்டும் விமர்சித்து வருவது ஏன்? என்று எனக்குப் புரியவில்லை. பேட்ஸ்மேனாக நான் சோபிக்கவில்லை எனில் எந்த விமர்சனங்களும் எழுவதில்லை. ஒருவேளை நான் 35 வயதுக்குள் இருப்பதால் விமர்சனங்கள் எழாமல் இருக்கலாம். ஒவ்வோர் ஆட்டத்திலும் சிறப்பான பங்களிப்பையும், கடின உழைப்பையும் தோனி அளித்து வருகிறார். அணியில் தன்னுடைய பங்களிப்பு என்ன என்பது அவருக்குத் தெரியும். விமர்சிப்பவர்களுக்கு மிகவும் பொறுமை தேவை என்றார் கோலி.

தற்போது, தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: தோனி சரியாக விளையாடாமல் அவருக்கு மோசமான நாள்கள் அமையவேண்டும் என நம்மைச் சுற்றியுள்ள பொறாமை பிடித்த பலர் எண்ணுவது போல உள்ளது. சிலர், தோனியின் இறுதி நாள்களைக் காண விரும்புகிறார்கள். ஆனால் தோனியைப் போன்ற சிறந்த வீரர்கள் அவர்களுடைய எதிர்காலத்தை அவர்களாக முடிவு செய்துகொள்வார்கள். 

தோனி மீதான விமரிசனங்களால் என்னிடம் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அணியில் தோனி எந்த இடத்தில் உள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஓர் அருமையான அணி வீரர். அற்புதமான தலைமைப் பண்புகளைக் கொண்டவர். நான் முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராகத் தொலைக்காட்சிகளில் பணியாற்றியபோது என்னிடம் சில கேள்விகள் கேட்கப்படும். அந்நிகழ்ச்சிக்காக நீங்கள் பதில்களைச் சொல்ல வேண்டும்.

தோனி ஒரு சூப்பர் ஸ்டார். நம்முடைய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். எனவே அவர் எப்போதும் விவாதங்களில் இடம்பெறுவார். அவரைப் போன்ற ஒரு சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கை அமையும்போது அது தொலைக்காட்சிகளின் விவாதங்களில் மையமாக இருக்கும். கடந்த ஒருவருடத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் சராசரி - 65 ரன்கள். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி தோனி நிறைய உதவியுள்ளார் என்று தோனிக்கு ஆதரவாகப் பேட்டியளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


selvam aqua

Universal Tiles Bazar

CSC Computer Education

Johnson's EngineersNew Shape Tailors


Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory