» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

திருவனந்தபுரத்தில் இந்திய அணி திரில் வெற்றி: கோப்பை வென்று அசத்தல்!!

புதன் 8, நவம்பர் 2017 9:17:06 AM (IST)திருவனந்தபுரத்தில்  நடந்த 3வது மற்றும் கடைசி டி–20 போட்டியில்  போட்டியில் இந்திய அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.  தொடரை 2–1 என கைப்பற்றியது. 

இந்தியா வந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ போட்டி தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளின் முடிவில், 1–1 என, தொடர் சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ‘டி–20’ போட்டி நேற்று, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக, இரண்டரை மணி நேரம் தாமதமாக,  8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது.  ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் தந்தது. 48 பந்துகள் தான் வீசப்படும் என்ற நிலையில், முதல் இரு ஓவர்களில், இந்த ஜோடி 14 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்த நெருக்கடியில், ஷிகர் தவான் (6), ரோகித் (8) என, இருவரும், டிம் சவுத்தீயின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகினர். கேப்டன் கோலி, சோதி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என விளாசினார். இவர், 13 ரன்னுக்கு அவுட்டானார். ஸ்ரேயாஸ் (6) நீடிக்கவில்லை. வந்த வேகத்தில் பாண்ட்யா, சான்ட்னர் பந்தில் சிக்சர் அடித்தார். எல்லை அருகே சான்ட்னர்–கிராண்ட்ஹோம் கூட்டணியின் அசத்தல் ‘கேட்ச்சில்’ மணிஷ் பாண்டே (17),   திரும்பினார். 8 ஓவரில் இந்திய அணி, 5 விக்கெட்டுக்கு 67 ரன்கள்  எடுத்தது. பாண்ட்யா (14), தோனி (0) அவுட்டாகாமல் இருந்தனர். 


எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் ஆரம்பத்திலேயே ‘வேட்டு’ வைத்தனர். புவனேஷ்வர் பந்தில் கப்டில் (1) போல்டானார். பும்ரா ‘வேகத்தில்’ ரோகித்தின் ‘சூப்பர் கேட்ச்சில்’ மன்ரோ (7) வீழ்ந்தார். நியூசிலாந்து அணி 4 ஓவரில் 26/2 ரன் எடுத்தது. அடுத்த 24 பந்தில் 42 ரன்கள் தேவை என்ற நிலையில், குல்தீப்பை அழைத்தார் கோலி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இவரது 3வது பந்தில், பாண்ட்யாவின் துல்லிய ‘த்ரோவில்’ வில்லியம்சன் (8) ரன் அவுட்டானார். அடுத்த பந்தில் பிலிப்ஸ் (11) திரும்பினார். போட்டியின் 6வது ஓவரை வீசிய சகால், 3 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, போட்டியை இந்திய அணியின் பக்கம் திருப்பினார். 

நியூசிலாந்து அணிக்கு தேவையான ‘ரன்ரேட்’ (14.50 ரன்) எகிற,  நிக்கோல்ஸ் (2), புரூஸ் (4) அடுத்தடுத்து அவுட்டாகினர். கடைசி ஓவரில், நியூசிலாந்து வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. பாண்ட்யா வீசிய இந்த ஓவரின் முதல் இரு பந்தில் 1 ரன் (உதிரி) கிடைத்தது. 3வது பந்தில் கிராண்ட்ஹோம் சிக்சர் அடிக்க, ரசிகர்கள் ‘டென்ஷன்’ அடைந்தனர்.  4வது பந்தில் ‘வைடு’ உட்பட, 2 ரன் எடுக்கப்பட்டன. அடுத்த 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5வது பந்தில் சான்ட்னர் 2 ரன் எடுக்க, இந்திய அணியின் வெற்றி உறுதியானது. கடைசி பந்தில் 1 ரன் மட்டும்  எடுக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி 8 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 61 ரன் மட்டும் எடுத்தது. சான்ட்னர் (3), கிராண்ட்ஹோம் (17) அவுட்டாகாமல் இருந்தனர். 6 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக  ‘டி–20’ தொடரை வென்று, கோப்பை கைப்பற்றியது. இதற்கு முன் நடந்த இரண்டு (2009, 2–0, 2012 ல் 1–0 ) தொடர்களிலும் நியூசிலாந்து தான் கோப்பை வென்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory