» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் பிளே ஆஃப்: ஐதராபாத்தை வெளியேற்றியது கொல்கத்தா அணி

வியாழன் 18, மே 2017 10:24:00 AM (IST)ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது .  இதனால் நடப்பு சாம்பியனான ஐதராபாத் போட்டியிலிருந்து வெளியேறியது. 

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், லீக் ஆட்டம் முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே காயம் காரணமாக இடம் பெறவில்லை. குல்தீப் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ், நாதன் கவுல்டர் நிலே, பியுஷ் சாவ்லா, இஷாங் ஜக்கி அணியில் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் ஹென்ரிக்ஸ், முகமது நபி, முகமது சிராஜ்க்கு பதிலாக யுவராஜ்சிங், கனே வில்லியம்சன், கிறிஸ் ஜோர்டான், பிபுல் ஷர்மா ஆகியோர் இடம் பெற்றனர்.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கெளதம் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஐதராபாத் அணியில் ஷிகர் தவன்-டேவிட் வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 25 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 11 ரன்களில் நடையைக் கட்ட, டேவிட் வார்னருடன் இணைந்தார் கேன் வில்லியம்சன். கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீச, வார்னர்-வில்லியம்சன் ஜோடியால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் 10 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது ஐதராபாத்.

அந்த அணி 12 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்திருந்தபோது வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வார்னர் 35 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் போல்டு ஆனார். இதன்பிறகு யுவராஜ் சிங் 9 ரன்களில் வெளியேற, சங்கர் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கிறிஸ் ஜோர்டான் டக் அவுட்டாக, நமன் ஓஜா 16 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசிப் பந்தில் ஆடடமிழந்தார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் கோல்டர் நைல் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மழை காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் கொல்கத்தாவுக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு, கிறிஸ் லின் ஆட்டமிழக்க, பின்னர் வந்த யூசுப் பதான் முதல் பந்திலேயே ரன் அவுட்டானார். இதையடுத்து வந்த கெளதம் கம்பீர் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, கிறிஸ் ஜோர்டான் வீசிய அடுத்த ஓவரில் உத்தப்பா (1) ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷாங்க் ஜக்கி களமிறங்க, கம்பீர் ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 2 ஓவர்களில் 21 ரன்களை எட்டியது கொல்கத்தா.

தொடர்ந்து அசத்தலாக ஆடிய கம்பீர், சித்தார்த் கெளல் வீசிய 4-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச, அதன் வெற்றி எளிதானது. இறுதியில் 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது கொல்கத்தா. கம்பீர் 19 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32, ஜக்கி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers


Universal Tiles Bazar

CSC Computer Education

selvam aquaNalam Pasumaiyagam


Pop Up Here

New Shape Tailors

Black Forest Cakes
Thoothukudi Business Directory