» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

வேளாண் கருவிகள் வாங்க ரூ.10 லட்சம் வரை மானியம் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

திங்கள் 26, ஆகஸ்ட் 2019 3:11:12 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து மானிய விலையில்  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பெற்று பயனடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு  : விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக் குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப் பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திடத்தின் கீழ் 2019-20 ஆம் நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் 7.74 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு டிராக்டர்கள், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்கள், வைக்கோல் கட்டும் கருவிகள், அறுவடை இயந்திரங்கள், பவர் டில்லர், விசைக் களையெடுப்பான், புதர் அகற்றும் கருவி, சுழற்கலப்பை, கொத்துக் கலப்பை, விதை விதைக்கும் கருவி, திருப்பும் வசதி கொண்ட ஹைட்ராலிக் வார்ப்பு இறகுக் கலப்பை, பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், கரும்பு கட்டை சீவும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, முதலானவற்றிற்கும் அவற்றின் மொத்த விலையில் 50 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு அவற்றின் மொத்த விலையில் 40 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாகவும் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு கிடைக்கும் வகையில், முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 இலட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40% அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் மானியமாக இரு தவணைகளாக வழங்கப்படும். கிராம அளவில் 8 உறுப்பினர் கொண்ட விவசாயக் குழுக்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 80% அல்லது அதிகபட்சமாக ரூ.8 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 70 எண்கள் டிராக்டர், 77 எண்கள் பவர்டில்லர், 3 எண்கள் நெல் அறுவடை இயந்திரம், 6 எண்கள் வைக்கோல் கட்டு கட்டும் கருவி, 11 எண்கள் விசைக் களையெடுப்பான், 26 எண்கள் பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், 43 எண்கள் ரோட்டவேட்டர், 3 எண்கள் தட்டை வெட்டும் கருவி, 10 எண்கள் திருப்பும் வசதி கொண்ட ஹைட்ராலிக் வார்ப்பு இறகு கலப்பை, 9 எண்கள் டிராக்டர் டிரெய்லர்கள் வாங்கிக் கொள்ள நடப்பாண்டில் ரூ467.87 இலட்சங்களும், 5 எண்கள் வட்டார வாடகை மையங்கள் அமைக்க ரூ50.00 இலட்சங்களும்; ஆளுனுயு திட்டத்தில் 32 எண்கள் கிராம அளவிலான வாடகை மையஙகள் அமைக்க ரூ.256.00 இலட்சங்களும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் ((Uzhavan app) தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in -ல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும், ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் (Dealer) தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் பொறியியல்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Anbu CommunicationsThoothukudi Business Directory