» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடியில் கொடிகட்டி பறக்கும் கந்து வட்டி தொழில்: விழிபிதுங்கி நிற்கும் அப்பாவி மக்கள்

வியாழன் 28, ஜூலை 2016 10:44:16 AM (IST)

துாத்துக்குடியில் கந்து வட்டி கொடுமையினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

துாத்துக்குடியில் தற்போது வட்டித்தொழில் கொடிகட்டி பறக்கிறது. முக்கியப் புள்ளிகள் கூட இதில் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றன. சாதாரண மக்களுக்கு உள்ள பணத்தேவையும் பெரிய மனிதர்களுக்கு உள்ள பணத்தாசையும் தான் இந்தத் தொழிலின் அபார வளர்ச்சிக்கு காரணம் என்றால் மிகையல்ல. ஆனால் வட்டிக்கு வாங்கிய பிறகு மக்கள் கடும் வேதனைக்கு ஆளாகின்றனர். 

உதாரணமாக கந்து வட்டிக்கு 10000 ரூபாய் வாங்கினால் அவர்கள் 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு தான் மீதி பணத்தை தருவார்கள். அடுத்த 10 நாள்கள் கழித்து மீண்டும் 1000 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும். இப்படியாக ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய் வட்டி மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படி கட்ட தவறினால் அதற்கும் ஒரு வட்டி என பணத்தை கறந்து விடுகின்றனர் என கூறப்படுகிறது. ஒரு லட்சம் வட்டிக்கு வாங்கினால் மாதம் 30000 ரூபாய் வட்டிகட்ட வேண்டும். இது கிட்டத்திட்ட 30 சதவிதம் ஆகிறது. 

பணம் தேவைப்படுபவர்களை வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அழைத்து செல்ல ஏராளமான இடைத்தரகர்களும் நம் நகரில் உள்ளனர். இவர்களுக்கு குறிப்பிட்ட சதவிதம் கமிஷன் வழங்கப்படுகிறது. இதையும் பணம் வாங்குபவர்களிடம் வசூலித்து விடுகின்றனர். இதில், பாதிக்கப்படுபவர்கள் என்னவோ ஏழை மற்றும் நடுத்தர அப்பாவிகள் தான். ஏதோ நம்பிக்கையில் இவர்களிடம் கடன் வாங்குவோர் மாதம், ஆண்டுகள் கடந்தாலும், வாங்கிய கடனின் முதல் அடைபடாமல் வட்டி செலுத்தும் நிலைதான் உள்ளது.இருந்த போதிலும் கந்து வட்டிக்காரர்கள் இவர்களை துரத்தியபடி வட்டி வசூலில் ஈடுபடுகின்றனர். 

அரசு ஊழியர்கள் கூட இவர்களிடம் இருந்து தப்பவில்லை. வட்டி பணத்திற்காக வங்கி ஏ.டி.எம். கார்டை பெற்று, மாதத் துவக்கத்தில் கடன் பெற்றோரின் சம்பளத்தை எடுத்து, வட்டி போக மீதி பணத்தை கொடுக்கும் நிலைதான் இன்றும் பல இடங்களில் உள்ளது. இதில் அரசு பணிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள்தான் அதிகம் பாதிக்கின்றனர். கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி வட்டி கொடுத்தே, தேய்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாமல், தங்களது சொத்துக்களையே பரிகொடுக்கும் நிலையும் தொடர்கிறது. 

இது தொடர்பாக, போலீசாரிடம் சென்றால் அவர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் எழுகிறது. பிரச்னை உயர் அதிகாரிகளிடம் செல்லும் போது மட்டுமே ஏதோ கடமைக்கு வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களும், ஜாமீனில் வெளியில் வந்ததும் புகார் கொடுப்பவரை உண்டு இல்லை என ஆக்குகின்றனர். இதற்கு அஞ்சியே பாதிக்கப்பட்ட பலரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை. கந்து வட்டிக்காரர்களுக்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் துாத்துக்குடி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அவலம் தினமும் நடக்கிறது.

இது குறித்து துாத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமார் நம் நிருபரிடம் தெரிவித்ததாவது, தினவட்டி, மணிநேரவட்டி,கந்துவட்டி,மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரைமுறை இல்லா வட்டி தொகையினை எவரேனும், அவரால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு கந்து வட்டியாக வசூலிப்பது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்பு சட்டம் 2003 பிரிவு 4-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதீத வட்டிவசூல் தடை
 
தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003) மிக அதிக வட்டி வசூலிப்பதை தடை செய்வதற்காக 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது தமிழகத்தில் 2003-ல் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தப்படும் கறாரான கீழ் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது போன்ற நிலையை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 

தண்டனை

வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் பரிந்துரைக்கலாம். இந்த அவசர சட்டத்தின் கீழ், போலீசார் மணிநேர வட்டி,கந்து வட்டி ,மீட்டர் வட்டி மற்றும் தண்டல் போன்ற ஆடம்பரமான பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதை தெரிந்து கொள்வது அவசியம் என்றார்.

எனவே துாத்துக்குடி மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் இந்த விஷயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் அநியாயமாக வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எஸ்பி சாட்டையை சுழற்றுவாரா?


மக்கள் கருத்து

SubramanianNov 8, 2016 - 10:30:18 PM | Posted IP 223.1*****

Aaaa

peopleSep 26, 2016 - 02:56:08 PM | Posted IP 103.3*****

மக்கள் வாங்குவது உண்மைதான் ஆனால் இவ்வளுவு வட்டி வாங்குவது குற்ற்றம்

சாண்டல் குமார்Sep 9, 2016 - 12:50:46 PM | Posted IP 61.1.*****

வாழ்க வளமுடன் .....

PublicAug 7, 2016 - 12:09:36 PM | Posted IP 101.5*****

Now a day's at Tuticorin more people facing this problem those were not meet out this problem

மேன்ஷன் பேஸ்ஸுலர்Jul 29, 2016 - 05:01:23 PM | Posted IP 115.1*****

ரெண்டாம் கேட் பாண்டியன் கிட்ட போலீசே அதிக வட்டிக்கு வங்கியிருக்காங்க

ராதாJul 29, 2016 - 01:37:21 PM | Posted IP 117.2*****

இது தப்பே இல்லை வாங்குறவனுக்கு எங்க போச்சி அறிவு

வடிவேல்Jul 28, 2016 - 12:27:21 PM | Posted IP 117.2*****

வட்டிக்கு பணத்தை கொடுத்து விட்டு வாங்க சிரமப்படுபவர்கள் தான் அதிகம். பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்று பவர்கள் தான் அதிகம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Johnson's Engineers
Thoothukudi Business Directory