» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

காவல்துறை நம் நண்பன் என்பதை செயலிலும் காட்டவேண்டும் - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திங்கள் 4, ஜூலை 2016 11:04:36 AM (IST)

கடந்த பத்து நாட்களாக தமிழக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உச்சரித்த பெயர் சுவாதி யாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அவரது படுகொலை தமிழகத்தை உலுக்கியது. காவல்துறை விரைந்து குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள் என அனைவரும் பாராட்டினாலும் தனக்கு ஒரு சிறிய பிரச்சனை என்றால் போலீசை அணுக பொதுமக்கள் பயப்படுவதே இது மாதிரியான பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

ஏன் என்றால் தனக்கு ஒரு பிரச்சனை என பெண்களும் சரி அல்லது பொதுமக்களும் சரி காவல்நிலையத்திற்கு சென்றால் அங்கு காவல்துறை அவர்களை நடத்தும் விதத்தை பார்த்து இதற்கு பிரச்சனையை நாமே பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். புகார் கொடுக்க காவல்நிலையத்திற்கு சென்றால் ஒரு சில நேரங்களில் புகாரை வாங்க மறுத்து விடுகின்றனர். இல்லையென்றால் பாதிக்கப்பட்ட 2 தரப்பிலும் பேசி பணம் வாங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் புகார் கொடுக்க செல்பவர்களையே குற்றம் செய்தவர்கள் போல் நடத்துகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

உதாரணமாக சேலத்தில் வினுபிரியா விஷயத்தில் புகார் கொடுக்க சென்றவர்களிடம் மார்பிங் செய்யப்பட்ட படத்தை நீக்குவதற்கு 2000 ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை லஞ்சமாக கேட்டுள்ளனர். இவர்களின் பண ஆசையினால் ஒரு உயிரே பாேயுள்ளது. போலீசார் விரைந்து செயல்பட்டிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. 

சுவாதி விஷயத்தில் தன்னை ஒருவன் பின் தொடர்கிறான் என தோழிகளிடம் கூற முடிந்ததே தவிர காவல்துறையை அணுக விடாமல் தடுத்தது எது என ஆராய வேண்டும். ஒரு விபத்து மற்றும் கொலை என்றால் அதை அனைவரும் பார்த்தும் தனக்கு ஏன் வம்பு என ஒதுங்க காரணம் என்ன என்று கேட்டால் உதவி செய்து விட்டு யார் நீதிமன்றத்திற்கும் காவல்நிலையத்திற்கும் அலைவது என கேள்வி கேட்கின்றனர். இந்த மாதிரி சூழ்நிலைகளில் தானாக முன்வந்து உதவி செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளித்தும் மற்றும் அவர்களை வழக்கு விசாரணைகளுக்காக அலைய விடக்கூடாது. அப்படி செய்தாலே தானாக முன்வந்து உதவுவார்கள்.
 
ஸ்காட்லாண்ட் யார்டு போலீசிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு காவல்துறை தான் என அனைவரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு தமிழ்நாடு காவல்துறை பல சிக்கலான வழக்குகளில் சாதுர்யமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட காவல்துறையை அணுகுவதில் பல பிரச்சனைகள் உள்ளது. காவல்துறையை அணுக மனபலம், பணபலம் வேண்டியுள்ளது. பிரச்சனைகளில் இருந்து பணபலம் உள்ளவர்கள் சுலபமாக வெளியே வந்து விடுகின்றனர், ஆனால் ஏழைகளின் நிலை தான் பரிதாபம். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தால் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்பார்கள். ஆனால் சென்னையில் ஒரு வாரத்தில் மட்டுமே கிட்டத்திட்ட 10 கொலைகள் நடந்துள்ளது இதனால் சட்டம் ஒழுங்கின் நிலை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் பாேது போலீசார் நன்றாக செயல்பட சம்பள உயர்வு மற்றும் பல சலுகைகள் கொடுப்பார். கடந்த டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு விழா நடந்தது. இதுபோன்ற அதிகப்படியான சலுகைகளே அவர்களை பணிசெய்ய விடாமல் தடுக்கிறதா என கேள்வி எழும்புகிறது. முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு நிலை பற்றிய உண்மையான நிலை கூறப்படுகிறதா என தெரியவில்லை. காவல்துறை என்பது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் துறையாகும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக நடமாட முடியும். 

இனியாவது முதல்வர் பொதுமக்கள் காவல்துறையை எளிதாக அணுகும்படி விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலைமை இப்படியே சென்றால் திமுக., தலைவர் கருணாநிதி சொன்னது போல் காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்பதை செயலிலும் காட்ட வேண்டும். இது நடக்குமா என்பது சமபந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers


crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory