» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

அனுமதி பெறாத தனியார் பள்ளிகளால் பாதிப்பு யாருக்கு? பெற்றோர்கள் கவலை - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செவ்வாய் 14, ஜூன் 2016 12:52:37 PM (IST)

துாத்துக்குடி மாவட்டத்தில் 3 பள்ளிகளை மூடியும், 11 அனுமதி பெறாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும், மாவட்ட நிர்வாகம் உத்தரவு அனுப்பியுள்ளது அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் தங்களின் பிள்ளைகளின் படிப்பு என்னவாகும் என பெற்றோர்களும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

தற்பேதைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு படிப்பு தரும் கல்வி தான் மிகப்பெரிய வியாபாரமாகி உள்ளது. ஒரு குடும்பத்தலைவர் பெறும் சம்பளத்தில் ஏறக்குறைய முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பணம் கல்விசெலவுக்கு தான் செல்கிறது. என்னதான் அரசுப்பள்ளிகள் இருந்தாலும் பெற்றோர்கள் பணம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் பள்ளிகளை தான் நாடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி சில தனியார் பள்ளிகள், நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி காண்பித்து அதை விளம்பரப்படுத்தி மேலும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

இதுபோன்ற பெற்றோரின் மனநிலையை புரிந்து கொண்டு தெருவுக்கு தெரு புற்றீசல் போல் தனியார் பள்ளிகள் முளைத்து வருகின்றன. பெற்றோரும் அந்த பள்ளி முறையாக அனுமதி வாங்கியுள்ளதா, அதன் நிர்வாகி,தலைமையாசிரியர் யார், பிள்ளைகள் படிக்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா என விசாரிக்காமல் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்க்கின்றனர். கடைசியில் அப்பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை என பூட்டி சீல் வைக்கும் போது தான் உண்மையை உணர்கின்றனர். ஆனால் அதற்குள் நிலைமை எல்லை மீறி போய் விடுகிறது. பின்னர் அழுது புலம்பி என்ன பயன் ?

ஒரு தனியார் பள்ளி ஆரம்பிக்க வேண்டுமெனில் அப்பள்ளி நிலத்திற்கு உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி (எல்பிஏ சான்று) பெற்றிருக்கவேண்டும். நர்சரி குழந்தைகளுக்கான பள்ளி எனில் கீழ்தளத்தில் இருக்க வேண்டும், அடுத்ததாக அப்பள்ளி கட்டடத்தினை ஆய்வு செய்து உறுதியாக இருக்கிறது என சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி நிர்வாகம் சான்று தரவேண்டும். மிக முக்கியமாக அப்பள்ளியில் பாதுகாப்பு வசதிகள் எவ்வாறு உள்ளது, தீயணைப்பு கருவிகள் உள்ளதா விபத்து ஏற்பட்டால் தப்பிக்க அவசர வழிகள் இருக்கிறதா என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தீயணைப்புத்துறை சான்றிதழ் தர வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு பல குழந்தைகள் பரிதாபமாக இறந்தது நினைவிருக்கலாம். ஆனால் நடைமுறையில் இதையெல்லாம் ஆராய்ந்துதான் சான்றிதழ் தருகிறார்களா என கேள்வி எழும்புகிறது. முன்பு அரசாங்கங்கள் பள்ளிகளை நடத்தியது தனியார்கள் மதுபான கடைகளை நடத்தினர். தற்போது நிலைமை தலைகீழாய் உள்ளது. ஊரில் இருக்கும் பணம் படைத்தவர்கள், தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் தான் பள்ளிகளை நடத்துகின்றனர். அதனால் பணம், அதிகாரம் ஆகியவை அதிகாரிகள் கண்ணை மறைக்கிறதோ என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

ஒரு பள்ளி ஆரம்பிக்கும் போது அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் கொடுக்கின்றனர். பின்னர் அட்மிஷன் நேரங்களிலும் தேர்ச்சி சதவிதங்களை காட்டி பிள்ளைகளை சேர்க்கின்றனர். ஆனால் அப்பொழுது எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் பின்னர் எந்த அடிப்படையில் அங்கீகாரம் பெறவில்லை என்று பூட்டி சீல் வைக்கின்றனர் என பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.அங்கீகாரம் பெறாத பள்ளி மாற்றுசான்றிதழைகாட்டி வேறு பள்ளியில் சேர்க்கவும் முடியாது பணம், நேரம், எதிர்காலம் என முன்றும் பாழாகிவிட்டது என பெற்றோர் குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.

வருடம் ஒரு முறை நடக்கும் தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்க அறை மேற்பார்வையாளர், பறக்கும் படை அதிகாரிகள் என பல குழுக்களை அமைக்கும் அரசு வருடம் முழுவதும் நடக்கும் பள்ளிகளை ஏன் குழு அமைத்து ஆய்வு செய்வதில்லை எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில் 3 பள்ளிகள் பூட்டி சீல் வைக்கவும், 11 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து, ஆட்சியரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியரிடம்கேட்ட போது அவர் கூறியதாவது, தற்போது பள்ளியை தொடங்கி விட்டு பின்பே அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். நடந்து கொண்டிருக்கும் பள்ளியை தான் ஆய்வு செய்து சான்று தருகின்றனர். இது கவன குறைபாட்டால் நடந்துள்ளது. எங்கள் பள்ளி 2015/16 ல் தொடங்கவில்லை 2016/17 கல்வியாண்டில் தான் தாெடங்கியுள்ளோம். ஆனால் எங்கள் பள்ளிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

சிபிஎஸ்சி என்றால் எட்டாம் வகுப்புக்கு மேல் தான் அங்கீகாரம் பெற வேண்டும் மேலும் அங்கிகாரம் பெற ஒரு வருட கால அவகாசம் உள்ளது. நாங்கள் விண்ணப்பித்த போது தான் சட்டசபை தேர்தல் வந்து தற்போது தான் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்து அதிகாரிகள் இப்பொழுது தான் நிலுவையிலுள்ளவற்றை பரிசீலிப்பர். அங்கீகாரம் குறித்த நோட்டீஸ் எங்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இது குறைத்து விரைவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம் என்றார்.

என்னதான் அரசும், மாவட்ட நிர்வாகமும், பள்ளிகளும் பல காரணங்களை கூறினாலும் பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகளும் பெற்றோர்களும் தான். எனவே பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல், தமிழக அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள்பது படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Universal Tiles Bazar


Pop Up Here

Johnson's Engineers

CSC Computer Education

Nalam Pasumaiyagam


selvam aqua

Black Forest Cakes




Thoothukudi Business Directory