» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 2 தேர்வில் முதல்வர் ஸ்டாலின் குறித்த கேள்வி : டிஎன்பிஎஸ்சி-க்கு டிடிவி தினகரன் கண்டனம்!

திங்கள் 10, பிப்ரவரி 2025 5:39:54 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்வர் ஸ்டாலின்  பற்றிய கேள்வி இடம்பெற்றிருப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மாநிலம் முழுவதும் குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள 2,327 பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் நேற்று முன்தினம் (பிப்.8) நடைபெற்றன.

முன்னதாக, குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை . இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியான நிலையில், முதன்மைத் தேர்வு பிப்.8ஆம் தேதி நடந்தது. முற்பகலில் நடந்த இரண்டாம் தாளில் பொது அறிவு மற்றும் பொதுத் திறனறிவுத் தேர்வுகள் நடைபெற்றன. 

பிற்பகலில் முதல் தாளான தமிழ் மொழி தகுதித் தேர்வு நடைபெற்றது. இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.

குரூப் 2 ஏ தேர்வில் முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்வி இடம்பெற்றிருப்பதாக புகார் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா ? அல்லது திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா ? தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குருப் 2 ஏ தேர்வில் தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழை பாடும் வகையில் கேள்வி கேட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், முதலமைச்சரின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டிருக்கும் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது அரசுப்பணிகளில் இருந்து கொண்டு திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் கலாச்சாரம், நவீன வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் விடுதலைப் போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன் போன்ற பாடத்திட்டங்களோடு, முதலமைச்சரின் புகழ் பாடவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா ? என அரசுப்பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, இனிவரும் காலங்களில் அந்தந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் அடங்கிய கேள்விகள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்வதோடு, அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory