» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய் 12, நவம்பர் 2024 4:11:38 PM (IST)



கன்னியாகுமரியில் வரும் டிச. 31 மற்றும் ஜன.1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட இருப்பதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில் பேசியிருப்பதாவது: வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் மறைந்த முதல்வர் கருணாநிதி. கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 133 அடியில் வானுயர் புகழுக்குச் சாட்சியமாக சிலை அமைத்தார். அந்தச் சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. வெள்ளிவிழா காண்கிறது வள்ளுவனார் சிலை.

அதை கொண்டாடுகின்ற விதமாக டிச.31 மற்றும் ஜன.1 ஆகிய நாட்களில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.இந்த உலகத்துக்கே பொதுமறை வழங்கியவர் நம் அய்யன் திருவள்ளுவர். சாதி, மத பேதங்களை கடந்து தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த திருவள்ளுவர் தந்த "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை வாழ்வியலாக பாமர மக்களின் உள்ளங்களிலும் பதிய வைத்து, உதடுகளை உச்சரிக்க வைத்தது திராவிட இயக்கம்.

ஆனால், அந்த வள்ளுவருக்கே காவிச் சாயம் பூச இன்றைக்கு ஒரு கும்பல் நினைக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் "சமத்துவத்தை வலியுறுத்தியவர் வள்ளுவர். அவர் எல்லோருக்கும் பொதுவான தமிழர்களின் அடையாளம்”- என்று மீண்டும் முழங்க வேண்டியிருக்கிறது. திருக்குறளுக்குப் பெருமை சேர்த்து, வெகுமக்களின் வாழ்வியலோடு கலக்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தது திராவிட இயக்கம்.

குமரியில் சிலை அமைக்க 1975-ஆம் ஆண்டே திட்டமிட்டாலும், அவருடைய கனவு 2000-ஆம் ஆண்டுதான் நிறைவேறியது. சிலையை உருவாக்குகின்ற பொறுப்பை சிற்பி கணபதி ஸ்தபதியாரிடம் ஒப்படைத்தார். 133 அதிகாரங்களை குறிக்கின்ற வகையில் 133 அடியில் சிலை அமைத்தார். ஏறத்தாழ நான்கு ஆண்டுகளில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் கருத்துக்கு சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி காட்சி வடிவம் தந்து அந்த சிலையை உருவாக்கினார். சிலை வடிவமைக்கின்ற பணி நடைபெறும்போது, "சிலை நிற்குமோ நிற்காதோ” என்று சந்தேகமாக கேட்டவர்களிடம் எல்லாம், ஸ்தபதி, "அலையும் மலையும் இருக்கும் வரை சிலை அசையாது இருக்கும், கவலைப்படாதீர்கள்”, என்று சொன்னார்.

அதை உறுதிப்படுத்துகிற விதமாக தமிழகத்தையே உலுக்கிய ஆழிப்பேரலையின்போது கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல், கம்பீரமாக நிமிர்ந்து நின்றார் திருவள்ளுவர். "மக்கள் தொண்டும் வள்ளுவர் சிலையும் என் பிறவிப் பெரும்பயன்” என - செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலைப் பணி 2000-ஆம் ஆண்டு ஜன. 1ம் தேதியன்று கருணாநிதியால் நாட்டுக்கும், தமிழினத்துக்கும் வழங்கப்பட்டது. பொத்தானை அழுத்தும்போது என் உடம்பு நடுங்கியது, என்று உணர்ச்சி வசப்பட்டார் தலைவர் கருணாநிதி. இந்த விழாவில்தான் திருவள்ளுவரை அய்யன் திருவள்ளுவர் என்று அழைக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.அவர், எதை செய்தாலும் கலை நுணுக்கத்தோடு பார் போற்றும் வகையில் செய்வார் என்பதற்கு விண்ணைத் தொடும் வண்ணம் உயர்ந்து நிற்கின்ற திருவள்ளுவர் சிலையும் ஒரு சான்று.

இப்படி பெருமைமிகு சிலை வெள்ளி விழா காண்கிறது. வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி இரண்டு நாட்களும் தமிழக அரசு, 25 ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருக்கிறது. இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படும். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.

திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்படும். வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணைய கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்படும். வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாக திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டி நடத்தப்படும். அனைத்து மாவட்ட நூலகங்களிலும், அன்றைய நாள் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு, திருக்குறளின் பெருமையை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் செய்யப்படும்.

திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இந்தியாவின் வரலாற்றை தென் குமரியிலிருந்து எழுத வேண்டும் என்ற நம்முடைய இலக்கின் அடையாளமான கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். உலகெங்கும் உள்ள என் அருமைத்தமிழர்கள் எங்கிருந்தாலும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் முதல்வர் பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory