» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு : நடிகர் விஜய்யின் த.வெ.க. தீர்மானம்!

ஞாயிறு 3, நவம்பர் 2024 8:37:53 PM (IST)



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடந்த  நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.இதைத் தொடர்ந்து கடந்த 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமான முறையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டை நடத்திக் காட்டினார்.

பாரதிய ஜனதா, தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தனது எதிரி என மாநாட்டு மேடையில் அறிவித்த விஜய் 2026-ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் தங்களோடு கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்றும் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், விஜய்யின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பதும் அரசியல் களத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற ஒரு சூழலில் விஜய் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார். கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 10.35 மணியளவில் விஜய் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது அலுவலகத்தில் வெளியில் திரண்டிருந்த கட்சி தொண்டர்களை பார்த்து அவர் கை அசைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலும், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையிலும் நடந்த செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முன்னெடுக்கும்.

பெருந்தலைவர் காமராஜராலும் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்றுவதோடு, அவரது நேர்மையான நிர்வாகச் செயல்பாட்டையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம்.

அம்பேத்கரின் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து அண்ணலின் வழியை எந்நாளும் பின்பற்றுவோம்.

வேலு நாச்சியாரின் மண் காக்கும் வீரத்தையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிக் களமாடும்.

* கொள்கைத் திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

* மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத்தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால் தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு "மதச்சார் பற்ற சமூகநீதிக் கொள்கைகள்" என்று பெயர் சூட்டி உள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும்.

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.

* ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தச் சட்டத்தை, இச்செயற்குழு கண்டிக்கிறது.

ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து போராடுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை மட்டுமல்ல, உரிமையும் ஆகும். அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் அதனை தடுக்க முயல்வதும், அவதூறுப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகு முறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் தி.மு.க. ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.

* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் கடும் தண்டனைகளை பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

* சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று தி.மு.க. அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழி போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும்.

* மாநிலத்திற்கான தன்னாட்சி உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி, மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விசயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்துத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.

* காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மன நிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெ க்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்ட ரீதியாகப் போராடவும் தயங்காது.

என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு, இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

* கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

* இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவு படுத்தியுள்ளது.

தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள், தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக் கொள்ள, ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி, மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப் பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம், இந்தச் சர்வதேசச் சட்டத்தை வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராடும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory