» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

புதன் 18, செப்டம்பர் 2024 5:41:33 PM (IST)

தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர் என்று ஜி.கே.வாசன்  தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக மூடுவதற்கான சரியான தருணமாகும். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

மதுவில்லா தமிழகத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு எனது தலைமையில் ஒரு கோடி கையெழுத்து பெற பட்டது. அதை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்து வருகிறது. இதற்கு டாஸ்மார்க், போதை பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.

மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் விதத்தில் அக்டோபர் 2-ந்தேதி முதல் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

நிபா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறையும் குமரி மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்கள், நகரங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். 

போதை பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பள்ளி- கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு நன்னெறி வகுப்புகள் அவசியமாகும். போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஏப்ரல், மே மாதத்தில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. சொத்து வரியை உயர்த்துவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை கைவிட வேண்டும்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமான பயணமா என்பது கேள்விக்குறி தான். நம்மைவிட சிறிய மாநிலங்களானான கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்கள் வெளிநாட்டு பயணத்தின் முலம் அதிக முதலீடுகளை பெற்று வந்துள்ளனர். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியதாகும். த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த பணி நடைபெறும். மாவட்ட, மாநில நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடித்து அக்டோபர் 20-ந் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கை 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

த.மா.கா. உறுப்பினரின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது மாநில அரசு தான். மத்திய அரசு என்று ஏமாற்றக்கூடாது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு தற்பொழுது மதுக்கடைகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். 

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் தான் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களிலேயே அதிக அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழகத்தில் தான் என்பது வேதனையான செயலாகும். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory