» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒடிசா ரயில் விபத்து திட்டமிட்டச் சதியா? கவனக்குறைவா? சீமான் கேள்வி!

சனி 3, ஜூன் 2023 4:44:11 PM (IST)

கோரமண்டல் ரயில் விபத்து திட்டமிட்டச் சதியா அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டதா என்பதை உடனடியாக இந்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு தொடர்வண்டி ஒடிசா மாநிலம் பாஹாநாகா பஜார் தொடர்வண்டி நிலையம் அருகே விபத்துக்குள்ளான செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன்.

இக்கோர விபத்தில் சிக்கி, 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமுற்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற செய்தி கவலையையும், துயரத்தையும் தருகிறது. இக்கொடிய விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். படுகாயமுற்றோர் விரைந்து நலம்பெற்று திரும்பிட விழைகிறேன்.

இக்கொடும் நிகழ்வு எதிர்பாராத விபத்தா அல்லது திட்டமிட்டச் சதியா அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டதா என்பதை உடனடியாக இந்திய ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும். வனப்பகுதியில் நடந்த இக்கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் வன்மையான கண்டனத்திற்குரியது.

பயணிகளை மீட்பதிலும், அவர்களுக்கு உரிய மருத்துவம் அளிப்பதிலும் எவ்வித தாமதமும் ஏற்படாமலிருக்க ஒடிசா மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மீட்புப்பணியை விரைவுப்படுத்த பேரிடர் மீட்புப் படையினர் மட்டுமல்லாது துணை இராணுவத்தையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்தான தகவல்களை உடனுக்குடன் அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும், துயர் துடைப்பு உதவிகள் வழங்கிடவும் தமிழ்நாடு அரசு மீட்புக்குழு ஒன்றினை விரைந்து அமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 லட்சமும், காயமுற்றோருக்கு தலா ரூபாய் 10 லட்சமும் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

UTHAYANJun 4, 2023 - 02:46:57 PM | Posted IP 172.7*****

ஒரிசா எங்கே உள்ளது என்றே இந்த கோமாளிக்கு தெரியாது.....COMEDY PIECE

இதுJun 3, 2023 - 06:01:16 PM | Posted IP 162.1*****

எல்லாம் ஒரு பிழைப்பா சீமான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory