» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்: திமுக அரசுக்கு த.மா.கா. கண்டனம்

வியாழன் 1, ஜூன் 2023 5:39:40 PM (IST)

தமிழக மக்களின் வயிற்றில் அடிக்காமல் கடன் சுமையை குறைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "2022-23ஆம் நிதியாண்டின் முடிவில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 72 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும், 63ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் மேற்கு வங்க மாநிலம் மூன்றாவது இடத்திலும், 57 ஆயிரத்து 478 கோடி ரூபாய் கடனுடன் ஆந்திர மாநிலம் நான்காவது இடத்திலும், 55 ஆயிரத்து 612 கோடி ரூபாய் கடனுடன் உத்தரப்பிரதேசம் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.  

ஒரு அரசாங்கம் கடன் வாங்குவது என்பது தனி மனிதன் கடன் வாங்குவது மாதிரி தான். இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு நபரின் மீதும் ஒரு லட்சத்திற்கும் மேல் கடன் தொகையை வைத்துள்ளது. 1947-ல் இந்திய சுதந்திரம் அடைந்தபோது ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் ஆங்கிலேயர்கள் நம்மிடம் ஆட்சியை விட்டு சென்றார்கள். ஆனால் தேர்தல் நேரங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் பிடித்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கும் நீங்கள் தேவையற்ற இலவசங்களை முன்னிறுத்தியதன் மூலம் இன்று இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு  தள்ளப்பட்டுள்ளது. நிதிச்சுமை உபரியாக இருக்கும் போது மக்களுக்கு தேவையான இலவசங்களை கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை. நிதியே பற்றாக்குறையாக இருக்கும் போது மக்களுக்கு தேவையற்ற இலவசங்களை முன்னிறுத்துவது ஏன்?

ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தி முதல்வர் அவர்களை முன்னிறுத்தி நடைபெறும் விளம்பரங்களை தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்ற வகையில் இலவச கல்வி, இலவச மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு இவையெல்லாம் செய்தாலே போதும்.  எந்த ஒரு பெண்மணி நாங்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச பயணம் வேண்டும் என்று கூறினார்கள்? ஆர்ப்பாட்டம் செய்தார்கள்?  நீங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு  தேவை இல்லாத வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கடன் சுமையை அதிகபடுத்துகிறீர்கள். கடன் வாங்கின அண்டை நாடான இலங்கையின் கதி என்ன? பாகிஸ்தானுடைய கதி என்ன? என்பதை நீங்கள் உணர வேண்டும். வளர்ச்சியில் நம்மை விட பின்னோக்கி உள்ள மகாராஷ்டிரா கூட கடன் வாங்கியவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் தான் உள்ளது. வளர்ச்சியில் நாம் முன்னோடியாக திகழ்கிறோம் என்று கூறிவிட்டு கடன் சுமையில் முதலிடத்தில் எப்படி?

கடன் அதிகரித்துவிட்டது மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் அன்றாட உழைக்கும் மக்களின் சுகாதாரம் மதுபானங்களினால் கெட்டு கிடக்கிறது. அரசு அதில் வருவாய் ஈட்டி பிழைப்பு நடத்துகிறது. மது அடிமைகளும் தங்களின் போதை தான் சொர்க்கம் என எண்ணுகிறார்கள் தமிழ்நாடு வீணாய் போய்விட்டது. ஐசியூவில் தள்ளப்பட்ட தமிழக வளர்ச்சி வேலை வாய்ப்புகளுக்காக செலவிடப்பட வேண்டிய நிதி வட்டிக்கும், கமிஷனுக்கும், கரப்சனுக்கும் கிடைக்கும் டெண்டர்களுக்காகவும் செலவிடப்படுகிறது. முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் பொய்யான வாக்குறுதிகள் மூலம் கிடைத்த இந்த பதவியைக் கொண்டு தமிழக மக்களின் வயிற்றில் அடிக்காமல் கடன் சுமையை குறைக்க முன்வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory