» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 55வது நினைவு தினம் : அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை

வியாழன் 1, ஜூன் 2023 11:36:06 AM (IST)



குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 55வது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின், 55-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், முன்னிலையில் இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:

குமரி தந்தை மார்ஷல் நேசமணி 1895 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் பள்ளியாடி அருகேயுள்ள நட்டாலம் ஊராட்சிக்குட்பட்ட நேசர்புரம் எனும் கிராமத்தில் அப்பல்லோஸ், ஞானம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது ஆரம்பப்பள்ளிப்படிப்பை பள்ளியாடி மற்றும் மார்த்தாண்டத்திலும், உயர்நிலைக் கல்வியை ஸ்காட் கிறிஸ்தவப் பள்ளியிலும் முடித்தார். எம்.ஏ படிப்பை நெல்லை சி.எம்.எஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பயின்று பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றார். சமூக பணியாற்றுவதற்குரிய இடம் கல்விக்கூடம் என்பதை உணர்ந்த நேசமணி, கேரளாவிலுள்ள கர்நூல், பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார். 

அவர் பணிபுரியும் காலத்தில் கல்வி என்றால் என்ன என்பதே தெரியாத, வறுமையில் வாடிய, சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட, மாணவ, மாணவியர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது பெற்றோரை அணுகி, அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு வேண்டினார். குறிப்பாக, தலித் மக்களின் கல்வி உயர்வுக்காகப் பெரிதும் பாடுபட்டார். இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களின் நெஞ்சங்களில் குடி புகுந்தார்.1921- ஆம் ஆண்டில் நேசமணி தமது வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 

1923-ஆம் ஆண்டிலிருந்து காலரா, வைசூரி போன்ற நோய்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதும் பரவி, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நேசமணி பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைத்திட ஏற்பாடு செய்தார். இதனால் அவரது புகழ் திருவிதாங்கூர் முழுவதும் பரவியது.

பனை மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை, அவர்களது நலனுக்காக போராடி வெற்றி பெற்றார். தமிழ்ப்பகுதிகள் தனி ஜில்லாவாக அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முழங்கினார். 1956-ஆம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல், தமிழகப் பகுதிகள் தங்கள் உரிமையை நிலைநிறுத்தியதோடு, தமிழகப் பகுதிகள் அனைத்தும் தாய்த் தமிழகத்துடன் இணைந்து, அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டம் தோன்றியதற்கு, முழு முதல் காரணமாக அமைந்தவர் மார்ஷல் நேசமணி.

‘குமரி தந்தை”, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி, மார்ஷல் என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக பெரியவர் என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர், நீதிக்காக போராடிய நெஞ்சுரமிக்க தலைவர், நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர், தன்னலம் கருதாத தியாகச் செம்மல், மார்ஷல் நேசமணி 01.06.1968-ஆம் ஆண்டு தனது 73-ஆவது வயதில் காலமானார்கள். அன்னாரின் 55-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மார்ஷல் நேசமணி அவர்களின் உறவினர்கள் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஆனந்த், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் செல்வி.கௌசிகி உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory