» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோயில் யானைக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி: அமைச்சர் திறந்து வைத்தார்

புதன் 8, பிப்ரவரி 2023 3:33:53 PM (IST)



பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணி குளிப்பதற்காக ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்துவைத்தார்.

கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்யாணி யானைக்கு, கோயிலுக்கு அருகில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்ட இந்துசமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இந்த குளியல் தொட்டியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்துவைத்தார்.

இதைத்தொடர்ந்து, பேரூர் ஆதீனத்தில் உள்ள அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 84 பேருக்கு சிவதீட்சை சான்றிதழ்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து கோவை கிழார் எழுதிய "தமிழரங்கு" என்னும் நூல் வெளியிடப்பட்டது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னிலையில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் நூலை வெளிட்டார். முதல் பிரதியை அமைச்சர் கே.சேகர்பாபு பெற்றுக் கொண்டார்

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 2007ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய பள்ளிகளை தொடக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 5 நிலையில் பயிற்சி பெற 15 பள்ளிகள் தொடங்கப்பட்டன. இப்பள்ளிகளில் 210 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 27 திருக்கோயில்களில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பழனி கோயில் கர்ப்பகிரகத்தில் நான் அத்துமீறி நுழைந்ததாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டுகிறார். இவ்வாறாக தவறான கருத்தை பரப்புவது வருத்தமளிக்கிறது. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். மருதமலை கோயில் அறங்காவலர் விரைவில் நியமனம் செய்யப்படுவார். 17 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

விரைவில் அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மருதமலை கோயிலில் லிஃப்ட் அமைக்க ஒப்பந்தம் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ஹரிபிரியா, இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory