» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் பேசியது தவறு தான்; டெய்சியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் : சூர்யா சிவா பேட்டி!

வெள்ளி 25, நவம்பர் 2022 5:23:27 PM (IST)



சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பரஸ்பரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாக திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர்.

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவரான திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சூர்யா சிவா குறிப்பிட்ட நாட்கள் கட்சி நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாகவும், மேலும் மாநில துணைத்தலைவரான கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் திருப்பூரில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாவதி தலைமையில் இரு தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டது. இதில் டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவரும் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்திருந்தனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த இருவரும் பாஜகவின் சித்தார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு பாஜக கட்சியில் சேர்ந்ததாகவும் கண் பட்ட நிகழ்வு போல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதாகவும், சூர்யா சிவா தனக்கு தம்பி போல தான் எனவும், உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விட்டதாகவும் ஆனால் மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி கட்சியின் மூத்த தலைவர்கள் கனகசபாபதி மற்றும் மலர்க்கொடி முன்னிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளதாகவும், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் சூர்யா சிவா "தான் பேசியது தவறு தான் எனவும் இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப்பூர்வமாக தனது விளக்கத்தை அளித்திருப்பதாகவும் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் செல்போனில் பேசிய தங்கள் இருவரிடமிருந்தும் இந்த ஆடியோ வெளியே செல்லவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டதாகவும், பாஜக மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே இது தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திமுகவில் சைதை சாதிக் மீது காவல்துறையில் புகார் அளித்தும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் பாஜக உடனடியாக நடவடிக்கை எடுத்ததோடு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது எனவும் இப்பிரச்சனையை இதோடு இருவரும் பரஸ்பரம் முடித்துக் கொண்டிருப்பதாகவும் எங்கள் இருவருக்கும் குடும்ப ரீதியான நட்பு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சாமிNov 26, 2022 - 01:55:52 PM | Posted IP 162.1*****

டெய்சியின் இந்த சமரசம் மூலம் அவர் எப்படி பதவி வாங்கினார் என்பதை அவரே ஒத்துக்கொண்டார் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory