» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: வீடியோவில் வரும் பெண் யார்? நீதிபதி கேள்வியால் கண்கலங்கிய சுவாதி

வெள்ளி 25, நவம்பர் 2022 12:48:46 PM (IST)

பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளால் அவர் கண்கலங்கினார். 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை, பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் மற்றொரு பிரிவிற்கு 5 ஆண்டு கடுங்காவல், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கியது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, முக்கிய வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவது வழக்கமாகிவிட்டது. 

நட்சத்திர சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறும்போது நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்க கூடாது. இந்த வழக்கில் சுவாதியை மீண்டும் விசாரிக்க விரும்புகிறோம். இதனால் சுவாதியை விசாரணை அதிகாரி இன்று, (நவ.25) உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜர்படுத்தவும், சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள், 2011-2015 வரையிலான கல்லூரி காலங்களில் கோகுல்ராஜை தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி தெரியும் என்று பதிலளித்தார். கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி பதிலளித்தார். 

அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அது யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சுவாதி கூறினார். அது யாரென்று சரியாக நினைவில்லையென்றும் தொடர்ந்து கூறினார்.

அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள்தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில் இல்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை முறை கேள்வி கேட்கிறோம் என்றனர். அப்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி அழுகத் தொடங்கிவிட்டார். அப்போது நீதிபதிகள், "நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம். எனவே நடந்த உண்மையை கூற வேண்டும்" என்று சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory