» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வெள்ளி 25, நவம்பர் 2022 11:38:21 AM (IST)



நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 3-ம் தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ம் தேதி நிறைவடையும். 

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி முதல் நாள் திருவிழாவான நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலியை ராஜாவூர் பங்கு இறைமக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு இறைமக்களும் சிறப்பித்தனர். மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. குருகுலமுதல்வர் ஹிலேரியஸ் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேராலய மணி ஒலிக்கப்பட்டது. சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. மலர்களைத் தூவி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து முதல்நாள் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியை ஹிலேரியஸ் தலைமையில் கோட்டார் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் சகாய ஆனந்த், பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், முன்னாள் பங்குத் தந்தை குணபால் ஆராச்சி, மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். 

திருவிழாவின் ஒவ்வொரு நாள் விழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெறுகிறது.  8-வது நாள் திருவிழாவான வருகிற 1-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 3-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேர்ப்பவனி ஆலய வளாகத்துக்குள் நடந்தது. கொரோனா அபாயம் நீங்கியதின் காரணமாக இந்த ஆண்டு வழக்கமாக தேர்ப்பவனி செல்லும் இடங்களில் தேர்ப்பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory