» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்!

வெள்ளி 25, நவம்பர் 2022 10:23:54 AM (IST)

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த இளைஞர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்கள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது, ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 5 பேர் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் இயற்றப்பட்டது. கடந்த செப்.26-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அக்.1-ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டம் அக்.3-ம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்மூலம், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்தது. 

பணம் அல்லது வெகுமதி போன்றவற்றை வெல்லும் வாய்ப்பு உள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் தடை செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக, அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதா கடந்த அக்.19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அக்.28-ம் தேதி அனுப்பப்பட்டது.

இந்த சூழலில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, "அவசர சட்டத்துக்கான ஒப்புதலை ஆளுநர் அன்றே அளித்தார். அதில் இருந்த அதே ஷரத்துகள்தான் இந்த சட்ட மசோதாவிலும் இருக்கிறது. ஆனால், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவருக்கு சந்தேகம் இருந்தால், அதை தெளிவுபடுத்துவோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு, அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கேட்டவிளக்கங்களை துரிதமாக அளிப்பதற்கான பணிகளை சட்டத் துறைமேற்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory