» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு

வியாழன் 24, நவம்பர் 2022 4:22:06 PM (IST)



தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்த நிதிநிறுவன அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஆரூத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் என்ற நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் போன்றவை முக்கியமானவை ஆகும். 

இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தருவோம் என்று கவர்ச்சிகரமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக முகவர்களையும், பணியாளர்களையும் மேற்கண்ட நிறுவனங்கள் நியமித்துள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கூட்டங்கள் நடத்தி, பொது மக்களை கவரும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு தாங்கள் அறிவித்தபடி, மாதந்தோறும் வட்டித்தொகையையும் மற்றும் முதலீட்டு தொகையையும் முறையாக திரும்பித்தரவில்லை என்று புகார்கள் வந்தன.

புகார்களின் அடிப்படையில் ஆரூத்ரா கோல்டு நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் ஆரூத்ரா நிறுவனம் சம்பந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிறுவனம் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் செலுத்திய மொத்த முதலீட்டு தொகை சுமார் ரூ.2 ஆயிரத்து 438 கோடி ஆகும்.

ஆரூத்ரா கோல்டு நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் பாஸ்கர், மோகன்பாபு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், ராஜசேகர், ஹரிஷ், மைக்கேல் ராஜ், நாராயணி போன்றோர் தலைமறைவாக உள்ளனர்.

இதேபோல், எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் சம்பந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதன் மூலம் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொது மக்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. முதலீட்டு தொகையாக மொத்தம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்ட 'ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 21 இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 4 ஆயிரத்து 500 பொது மக்களிடம் முதலீட்டு தொகை பெற்று, சுமார் ரூ.600 கோடி அளவுக்கு வசூல் நடந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சவுந்தர்ராஜன் என்பவரும், அவர் மகன் அலெக்சாண்டர் என்பவரும் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக உள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கண்ட 3 நிறுவனங்களில் முதலீட்டு தொகை செலுத்தி ஏமாந்த பொது மக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம். இந்த 3 நிறுவனங்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படையில் தலைமறைவு குற்றவாளிகளாக இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல், உறுதியாக இருப்பின் அவர்களுக்கு தக்க சன்மானம், ரொக்கப்பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, 'இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைபட்டு, பொது மக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

மேற்கண்ட 3 மோசடி நிறுவனங்களிலும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் முதலீடு செய்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நியாயமான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலீட்டு தொகையை இழந்த பொது மக்களுக்கு அவற்றை திருப்பி பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory