» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் முடங்கின : பொதுமக்கள் அவதி

புதன் 23, நவம்பர் 2022 4:19:23 PM (IST)



தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கியது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகளிலும் அலுவலகப் பணிகள் பாதிப்பு அடைந்தது. இதனால் அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடி கிடந்தன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று 23.11.2022 மற்றும் நாளை 24.11. 2022 ஆகிய இரு தினங்கள் மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த சிறு விடுப்பு போராட்டம் நடத்த போவதாக ஏற்கெனவே அறிவித்து இருந்தனர். அதன்படி இன்றும் நாளையும் அவர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள் காலம் கடந்த ஆய்வுகள், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப் காணொளி ஆய்வுகள் ஆகிய அனைத்தையும் முற்றாக கைவிட வேண்டும்.ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் வேண்டும். விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017-இல் வெளியிடப்பட்ட அரசாணை யின்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணி வரன்முறை செய்ய வேண்டும். பொதுமக்களின் நலன்களையும் நிர்வாக நலன்களையும் கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சிகளை பிரித்து அதிகபட்சமாக 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த காலங்களில் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்ட காலங்களை வரன்முறை படுத்த வேண்டும்.ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். முழு சுகாதார திட்ட மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கி அவர்களை பணி வரன்முறை செய்தல் வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட முழு சுகாதாரத் திட்ட ஒழுங்கிணைப்பாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்.

பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை மேற்கொள்ள போதுமான ஊழியர் கட்டமைப்பினை உருவாக்குதல் வேண்டும். பொறியியல் பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த ஊழியர்கள், பதிவரை எழுத்தர்கள் நிலையில் பணியமர்த்தப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின்னர் தொழில்நுட்ப உதவியாளர்களாக 10 ஆண்டுகள் பணியினை நிறைவு செய்யவில்லை என்று பணி நீக்கம் செய்ய மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு அவர்கள் அனைவரையும் பணி வரன்முறை படுத்த வேண்டும்.

உதவி இயக்குனர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நிலை பதவி உயர்வு ஆணைகளை கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 23. 11.2022 புதன் கிழமை மற்றும் நாளை 24.11.2022 வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களும் தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில ஒட்டுமொத்த சிறு விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
 
அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இந்த சிறுவிடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அலுவலக வேலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனைகள் தலையிட்டு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory