» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

புதன் 23, நவம்பர் 2022 11:43:51 AM (IST)

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய, 2007 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி உதவியாளர்கள் தமிழ்நாடு அரசால் பணியமர்த்தப்பட்டனர். பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றியும் கணினி உதவியாளர்களை தமிழ்நாடு அரசு இன்றுவரை பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.

பணி நிரந்தரம் வேண்டி கணினி உதவியாளர்கள் முன்னெடுத்த பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 22.03.2017 அன்று பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையை முந்தைய அதிமுக அரசு வெளியிட்டபோதும் அரசு இறுதிவரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், முந்தைய அதிமுக அரசினைப் போலவே பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி வருவது கணினி உதவியாளர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.

அரசாணை வெளியிட்டு ஆறு ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கணினி உதவியாளர்கள் வீதியில் இறங்கி பல்வேறு தொடரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக கணினி உதவியாளர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தினை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரித்து, கோரிக்கைகள் வெல்லும்வரை துணை நிற்கும் என்று உறுதியளிக்கின்றேன்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அரசாணை 37 இன் படி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் பணிபுரியும் 906 கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை அடிப்படை உரிமைகளையும் வழங்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory