» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின் கட்டணம் - ஆதார் இணைப்புக்கு அவகாசம் அளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

புதன் 23, நவம்பர் 2022 11:40:47 AM (IST)

"மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது.

ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையானோருக்கு தெரியவில்லை. அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.

ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது, பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory